அயர்லாந்து பிரதமர் மாளிகையில் வரவேற்பு அயர்லாந்து பிரதமர் மாளிகையில் வரவேற்பு 

அயர்லாந்து பிரதமர் மாளிகையில் வரவேற்பு

சுவர்களை அல்ல, பாலங்களை எழுப்புங்கள். ஏனெனில் சுவர்கள் வீழ்ந்துவிடும்.

மேரி தெரேசா - வத்திக்கான்

உள்ளூர் நேரம் பகல் 12 மணியளவில், அரசுத்தலைவர் மாளிகையிலிருந்து டப்ளின் அரண்மனைக்கு, காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 1171ம் ஆண்டிலிருந்து, மூன்று கட்டமாக, எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக, பிரித்தானியர்கள் அயர்லாந்தை ஆக்ரமித்திருந்ததன் அடையாளமாக இந்த அரண்மனை விளங்குகிறது. அவ்விடத்தில் அயர்லாந்து பிரதமர் Leo Varadkar அவர்கள், திருத்தந்தையை வரவேற்றார். பின்னர், “எல்லாம்வல்ல இறைவன் அயர்லாந்து மக்களை ஆசிர்வதிப்பாராக. அமைதி மற்றும் மகிழ்வின் கொடைகளை அவர்கள் மீது பொழிவாராக, பிரான்சிஸ், 25.08.18” திருத்தந்தை, விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர், புனித பாட்ரிக் அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார், பிரதமர் Varadkar. அந்த அரங்கத்தில், அமர்ந்திருந்த அரசு, தூதரக அதிகாரிகள், கலாச்சார, சமயப் பிரதிநிதிகள், பொதுநிலைத் தலைவர்கள் மற்றும் திருஅவை பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அயர்லாந்து பிரதமரின் வரவேற்புரை

முதலில் அயர்லாந்து பிரதமர் Leo Varadkar அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையே, தங்களை அயர்லாந்து மரபுப்படி, இலட்சக்கணக்கான வாழ்த்துக்களால் தங்களை வரவேற்கிறோம். 1980ம் ஆண்டில், Milltown Parkலுள்ள இயேசு சபையினரின் மையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்காக அயர்லாந்து வந்து சில வாரங்கள் தங்கியிருந்தீர்கள். இப்போது மீண்டும் தங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அயர்லாந்துக்கு வந்த அடுத்த ஆண்டில், அதாவது 1980ம் ஆண்டில், புனித வெள்ளி ஒப்பந்தத்தின் வழியாக, இந்தத் தீவில் அமைதி கிட்டியது. திருத்தந்தையே, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக் கோளத்தையும் அதன் மக்களையும் பாதுகாப்பது, நம் கடமையாகும். இப்பூமியைப் பாதுகாப்பதற்கு தாங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றி. குடும்பங்களின் உலக மாநாட்டிற்காக தாங்கள் அயர்லாந்து வந்திருந்தாலும், ஏனைய சந்திப்புக்களையும் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. தங்களின் இப்பயணம், நூற்றாண்டுகளுக்கு முன்னர், அயர்லாந்துக்கு விசுவாசத்தைக் கொணர்ந்த கத்தோலிக்கத் திருஅவைக்கும், அயர்லாந்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி, மேலும் மிக ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளது. அயர்லாந்து கவிஞரும், வல்லுனரும், துறவியுமான புனித கொலும்பானுஸ், ஆறாம் நூற்றாண்டில் இக்கண்டத்திற்கு நற்செய்தியைத் திரும்பக் கொண்டு வந்தார். அவரின் பணியால், அவர் அயர்லாந்தின் முதல் ஐரோப்பியர் எனவும், ஒன்றிணைந்த ஐரோப்பாவைக் கட்டியெழுப்பும் வழிகளைத் தேடுவோர்க்கு அப்புனிதர் பாதுகாவலர் எனவும் போற்றப்படுகிறார். நாங்கள் பரந்த உலகின் குடிமக்கள் மற்றும் உலகளாவிய குடும்பத்தின் அங்கம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு கத்தோலிக்கத் திருஅவை உதவியுள்ளது. இவ்வாறெல்லாம் உரையாற்ரறிய பிரதமர், இப்பயணத்திற்கு நன்றி சொல்லி, தங்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.  

பிரதமரின் வரவேற்புரைக்குப் பின்னர், திருத்தந்தையும், அயர்லாந்து நாட்டிற்கு தன் முதல் உரையை ஆற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2018, 15:45