அரசுத்தலைவர் மாளிகையில்  தங்கப் புத்தகத்தில் எழுதுகிறார்ர் திருத்தந்தை அரசுத்தலைவர் மாளிகையில் தங்கப் புத்தகத்தில் எழுதுகிறார்ர் திருத்தந்தை  

டப்ளின் அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு

“நான் பெற்ற இனிய வரவேற்பிற்கு மிக்க நன்றி. எல்லாம்வல்ல இறைவன் உங்கள் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்துமாறு, உங்களுக்காகவும், அயர்லாந்து மக்களுக்காகவும் செபிப்பதாக உறுதியளிக்கிறேன்” - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான்

ஆல் இத்தாலியா விமானத்தில் டப்ளினுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்தில், தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு செய்தியாளர்களை வாழ்த்தி, நன்றி சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ். குடும்பங்களின் விழாவில் கலந்துகொள்வது, இது இரண்டாவது முறையாகும். பிலடெல்ஃபியாவில் நடைபெற்ற குடும்பங்களின் விழாவில் முதலில் கலந்துகொண்டேன். குடும்பங்களோடு இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பயணம் பற்றியும் மகிழ்வாக உள்ளேன். மேலும், இந்தப் பயணம் இன்னொரு விதத்தில் எனக்கு மகிழ்வாக இருக்கிறது. 38 ஆண்டுகளுக்குப் பின் அயர்லாந்துக்கு மீண்டும் செல்கிறேன். 1980ம் ஆண்டில் எனது ஆங்கில மொழி வளத்தை மெருகூட்ட மூன்று மாதங்கள் அயர்லாந்தில் தங்கியிருந்தேன். அது எனக்கு மிக அழகான அனுபவமாக இருந்தது என்று, செய்தியாளர்களிடம் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விமான நிலையத்தில் வரவேற்பு

மூன்று மணி 15 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, டப்ளின் நகரை திருத்தந்தை அடைந்தபோது, உள்ளூர் நேரம் இச்சனிக்கிழமை காலை 10.30 மணியாக இருந்தது. அயர்லாந்தின் ஏறத்தாழ எழுபது இலட்சம் மக்களில், மூன்றில் ஒருபகுதியினர், தலைநகர் டப்ளினில் வாழ்கின்றனர். இந்நகரின் பன்னாட்டு விமான நிலையத்தில், உதவி பிரதமர் மற்றும், முக்கிய திருஅவைத் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். அயர்லாந்து திருப்பீடத் தூதர், நைஜீரியப் பேராயர் Jude Thaddeus Okolo அவர்கள், விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வரவேற்றார். விமானப்படிகளில் இறங்கி வந்த திருத்தந்தையிடம், இரு சிறார், மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர். இதற்குப் பின்னர், அங்கிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு

அயர்லாந்து வெள்ளை மாளிகை என அழைக்கப்படும் இவ்விடத்தின் முகப்பில், அரசுத்தலைவர் Michael D. Higgins அவர்கள் திருத்தந்தையை வரவேற்றார். அங்கு, அரசு மரியாதையுடன் திருத்தந்தைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அம்மாளிகையில் தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார், திருத்தந்தை. அரசுத்தலைவர் Higgins  அவர்களை தனியாகச் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, அயர்லாந்தின் பாதுகாவலராகிய புனித பாட்ரிக் அவர்களின் மிக அழகான படம் ஒன்றையும் பரிசாக அளித்தார். அரசுத்தலைவர் மாளிகை தோட்டத்தில்,1979ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நட்ட மரத்திற்கருகில்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 25, இச்சனிக்கிழமையன்று ஒரு மரத்தை நட்டார். இம்மாளிகை, ஃபோனிக்ஸ் பூங்காவில் அமைந்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2018, 15:17