தேடுதல்

திருத்தந்தையின் அயர்லாந்து திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் அயர்லாந்து திருத்தூதுப் பயணம்  

திருத்தந்தையின் அயர்லாந்து திருத்தூதுப் பயணம்

டப்ளின் நகரில் நடைபெற்றுவரும், குடும்பங்களின் 9வது உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயர்லாந்து குடியரசுக்குச் சென்றார்

மேரி தெரேசா - வத்திக்கான்

வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள அயர்லாந்து, இயல்பிலே ஒரு கத்தோலிக்க நாடு. 5ம் நூற்றாண்டிலே, இந்நாட்டில் கத்தோலிக்கம் பரவியுள்ளது. தலைநகர் டப்ளினில்தான், Oscar Wilde போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்துள்ளனர். மத்திய காலத்தின் புகழ்பெற்ற கையெழுத்துப் பிரதிகள், டப்ளினில் Trinity கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் எங்கு திரும்பினாலும் பசுமை காணப்படுவதால், கவிஞர்கள், அயர்லாந்தை பச்சைக்கல் மரகதத் தீவு என வர்ணித்துள்ளனர். மத்திய கால அரண்மனைகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.  குடும்பங்களின் 9வது உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 24வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக,  ஆகஸ்ட் 25, இச்சனிக்கிழமை காலை 7.35 மணிக்கு,  வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

மேரி மேஜர் பசிலிக்காவில் செபம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும், பயணத்தை நிறைவு செய்து திரும்பும்போதும், உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பசிலிக்கா சென்று செபிப்பதை, ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அயர்லாந்து பயணத்தையொட்டி, ஆகஸ்ட் 24, இவ்வெள்ளிக்கிழமை மாலையில், மேரி மேஜர் பசிலிக்கா சென்று, அன்னை மரியிடம் இந்தப் பயணத்தை அர்ப்பணித்து, குடும்பங்களின் 9வது உலக மாநாட்டிற்காகச் செபித்தார் திருத்தந்தை. இச்சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு, A320 ஆல் இத்தாலியா விமானத்தில் டப்ளின் நகருக்குப் புறப்பட்டார். திருத்தந்தையர் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கையில், உரோமையிலிருந்து திருத்தந்தையரை அந்தந்த நாடுகளுக்கு ஏற்றிச்செல்லும் பணியை, ஆல் இத்தாலியா விமானச் சேவை, கடந்த 54 ஆண்டுகளாக ஆற்றி வருகின்றது. 1964ம் ஆண்டில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை புனித பூமிக்கு ஏற்றிச் சென்ற ஆல் இத்தாலியா விமானம், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அயர்லாந்துக்கு அழைத்துச் செல்வது, அதன் 170வது பாப்பிறை சேவையாக அமைந்துள்ளது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் மேல் விமானம் பறந்துசெல்கையில், செபங்களும், வாழ்த்துக்களும் நிறைந்த தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2018, 15:14