அயர்லாந்தில் குடும்பங்களின் 9வது உலக மாநாடு அயர்லாந்தில் குடும்பங்களின் 9வது உலக மாநாடு  

குடும்பங்கள் மாநாட்டில் பல நாட்டவரின் உரைகள்

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்றுவரும் குடும்பங்களின் 9வது உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, ஆகஸ்ட் 25, இச்சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து டப்ளின் புறப்படுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

குடும்பம், இறைவனின் திருவடிவம், இக்குடும்பத்தில் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள பிணைப்பு, வாழ்வு மற்றும் ஒன்றிப்பைப் பிறப்பிக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று கூறியுள்ளார்.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்றுவரும் குடும்பங்களின் 9வது உலக மாநாட்டையொட்டி, கடந்த சில நாள்களாக, குடும்பங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இந்த குடும்பங்களின் மாநாட்டின் ஒரு பகுதியாக, டப்ளினில் இடம்பெற்றுவரும் மேய்ப்புப்பணி கருத்தரங்குகளில், ஆகஸ்ட் 22, இப்புதனன்று 26 முக்கிய உரைகளும், கலந்துரையாடல் அமர்வுகளும் நடைபெற்றுள்ளன.

இந்த மேய்ப்புப்பணி கருத்தரங்கின் முதல் அமர்வில் தொடக்கவுரையாற்றிய, வியன்னா கர்தினால், Christoph Graf von Schönborn அவர்கள், “இறைவார்த்தையின் ஒளியில், யூத-கிறிஸ்தவ மரபில், குடும்ப வாழ்வைக் கொண்டாடுதல்” என்ற தலைப்பில் தன் கருத்துக்களை வழங்கினார்.

மேலும், குடும்பத்தில் அன்பின் வல்லமை, மாற்றுத்திறனாளர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவும் முறைகள், குடும்பத்தில் விசுவாசம், பெற்றோருக்கும், குடும்பத்தில் ஏனையோருக்குமிடையேயுள்ள உறவுகள், வீடற்றவர்களிடம் கிறிஸ்தவ அணுகுமுறை போன்ற தலைப்புகளில், முதல் நாள் அமர்வுகளில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மெக்சிகோ, சிரியா, இத்தாலி, அயர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, இங்கிலாந்து, இஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்த அமர்வுகளில் உரையாற்றினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2018, 15:15