Vatican News
புனித அன்னை மரியா பேராலயத்தில் தம்பதியரைச் சந்திக்கும் திருத்தந்தை புனித அன்னை மரியா பேராலயத்தில் தம்பதியரைச் சந்திக்கும் திருத்தந்தை  (ANSA)

புனித அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தையின் உரை

அன்பின் புரட்சி இவ்வுலகிற்கு அவசியம் தேவைப்படுகிறது! கனிவு, மென்மை ஆகிய புரட்சிகள் இன்றி, அன்பின் புரட்சி ஏற்படாது! – தம்பதியரிடம் திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு நண்பர்களே, எண்ணற்ற திருமண அருளடையாளங்களைக் கண்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித மரியா பேராலயத்தில் நாம் சந்திப்பது மகிழ்வைத் தருகிறது. இப்புனிதத்தலத்தில், ஆயிரமாயிரம் முறை, அன்பு பரிமாறப்பட்டு, வரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொன்விழா கொண்டாடும் தம்பதியரின் கருத்துக்கள்

50 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருக்கும் வின்சென்ட்டும், தெரேசாவும் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், அயர்லாந்தில் வாழும் இளையோருக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இளையோருக்கு சவாலாக அமைந்துள்ளன. முதியோரின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதன் வழியே, திருமண வாழ்வைக் குறித்து எவ்வளவோ கற்றுக்கொள்ளலாம்.

திருமண வாழ்வு ஓர் அழைத்தல்

இளம் தம்பதியர் தங்கள் உள்ளத்தைத் திறந்து கேட்டுள்ள கேள்விகளுக்கு நன்றி கூறுகிறேன். இக்கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்ல இயலாது. திருமணம் ஓர் அழைத்தல் என்பதை எவ்விதம் தங்கள் வாழ்வால் மற்றவருக்குப் புரியவைப்பது என்ற கேள்வியை, தங்கள் திருமண வாழ்வைத் துவங்கவிருக்கும் டென்னிசும், ஷினேயிடும், (Denis and Sinead) கேட்டனர்.

வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் உண்மைகளைக் குறித்து இக்காலத்தில் சரியான புரிதல் இல்லை. மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகில், எதுவுமே நிரந்தரமாக, நிலைத்திருப்பதைப்போல் தெரிவதில்லை. இத்தகையைச் சூழலில், வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் திருமண உறவை எப்படி உணர்வது என்பதே, இவர்கள் கேள்வியில் பொதிந்திருக்கும் பொருள் என்று நினைக்கிறேன்.

இதைக்குறித்து நான் சொல்ல விழைவது இதுதான். இறைவனின் நித்திய அன்பு என்ற மறையுண்மையில், திருமணம் என்ற அருளடையாளம், சிறப்பான முறையில் பங்கு பெறுகிறது. இயேசுவுக்கும், அவரது மணப்பெண்ணான திருஅவைக்கும் இடையே நிலவும் நிலையான அன்புக்கு ஒரு வெளி அடையாளமாக திருமண அருளடையாளம் விளங்குகிறது.

அன்பில் நிலைத்திருப்பது இறைவனின் கனவு. அந்தக் கனவை நம் அனைவருக்கும் இறைவன் வழங்கியுள்ளார். அந்தக் கனவைத் தொடர்வதற்கு அஞ்சாதீர்கள்! "நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்" (எபிரேயர் 13:5) என்று கடவுள் அளித்துள்ள வாக்குறுதியை, கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் அளித்து, ஒருவர் ஒருவரை ஆசீர்வதிக்கவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் மத நம்பிக்கையை எவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கமுடியும் என்ற கேள்வியை, புதிதாக திருமணம் முடித்துள்ள ஸ்டீபனும், ஜோர்டனும் (Stephen and Jordan) கேட்டனர்.

மத நம்பிக்கையை வளர்க்கும் பள்ளி

மத நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அதை, அடுத்தத் தலைமுறைக்கு அளிப்பதற்கும், உகந்ததொரு பள்ளி, நமது இல்லமே. 'இல்லமாகிய திருஅவை'யில் குழந்தைகள், நம்பிக்கை, பிரமாணிக்கம், தியாகம் ஆகிய உன்னத உண்மைகளைக் கற்றுக்கொள்கின்றனர். அன்னையும், தந்தையும் ஒருவர் ஒருவரோடு பழகும் முறையிலிருந்து, நற்செய்தி விழுமியங்களை, குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். குடும்பங்களில் நிகழும் சாதாரண உரையாடல்கள் வழியே மத நம்பிக்கைக்குத் தேவையான பாடங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

இணைந்து செபியுங்கள், கொண்டாடுங்கள்

எனவே, குடும்பமாக இணைந்து செபியுங்கள், நல்லவற்றை, புனிதமானவற்றைப் பற்றி பேசுங்கள். அன்னை மரியாவை, குடும்ப வாழ்வில் இணைத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ விழாக்களைக் கொண்டாடுங்கள். தேவையில் இருப்போருடன் ஒன்றிணைந்து வாழுங்கள். ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமெனில், மத நம்பிக்கையைச் சொல்லித்தரும் முதல் ஆசிரியர்கள் நீங்களே. உங்களிடமிருந்து, கிறிஸ்தவ வாழ்வைக்குறித்து, உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.

சக்தியிழந்தோரை, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய இயலாதோரை புறந்தள்ளிவிடும் இவ்வுலகப் போக்கிற்கு எதிரான உண்மைகளையும், புண்ணியங்களையும் ஆண்டவர் நமக்குச் சொல்லித் தருகிறார். அன்பின் புரட்சி இவ்வுலகிற்கு அவசியம் தேவைப்படுகிறது! கனிவு, மென்மை ஆகிய புரட்சிகள் இன்றி, அன்பின் புரட்சி ஏற்படாது!

உங்களுடைய எடுத்துக்காட்டு, உங்கள் குழந்தைகளை அதிக அன்பில், கனிவில், நம்பிக்கையில் வழிநடத்தட்டும். முதியவர்கள் என்ற வேர்களை மறந்துவிட்டு, எந்தக் குடும்பமும் வளர முடியாது! 'பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளவற்றிலிருந்தே மரத்தில் மலர்கள் தோன்றுகின்றன' (F.L. Bernárdez, sonnet, Si para recobrar lo recobrado) என்று ஆர்ஜென்டீனா கவிஞர் கூறியுள்ளார்.

உலகின் அனைத்துக் குடும்பங்களும், திருத்தந்தையுடன் இணைந்து, நம்பிக்கை மற்றும் கிறிஸ்தவ திருமணம் என்ற கொடைகளை வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் வாழ்வில் அளித்த வாக்குறுதிகளைக் காப்பதன் வழியே, இறையரசிற்குப் பணியாற்றுவோம் என்ற உறுதியை அளிப்போம்.

உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் அன்பு உறவுகள் அனைவருக்கும் என் ஆசீரை வழங்குகிறேன்.

26 August 2018, 16:01