தேடுதல்

Vatican News
Knock அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை Knock அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை  (AFP)

Knock அன்னை மரியா திருத்தலத்தில் மூவேளை செப உரை

Knock அன்னை மரியாவின் திரு உருவத்திற்குமுன் நான் செபித்த வேளையில், அயர்லாந்து தலத்திருஅவையின் உறுப்பினர்களால் துன்புற்றோரை அன்னையிடம் ஒப்படைத்தேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, அயர்லாந்து மக்களுக்கு மிகவும் விருப்பமான Knock அன்னை மரியா திருத்தலத்தைக் காணும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

அன்னை மரியா காட்சியளித்த சிற்றாலயத்தில் நான் செபித்த வேளையில், உலகெங்கிலும் உள்ள குடும்பங்களை, சிறப்பாக, அயர்லாந்தில் உள்ள குடும்பங்களை அன்னையிடம் ஏந்திச் சென்றேன். இந்தப் பயணத்தின் நினைவாக, ஒரு தங்க செபமாலையை, இத்திருத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கினேன். பாரம்பரியமாக, இந்நாட்டில், செபமாலைக்கு வழங்கப்படும் மதிப்பை நான் நன்கறிவேன்.

நாம் மேற்கொள்ளும் இவ்வுலகப் பயணத்தை, அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம். அலைக்கழிக்கும் புயல்களிலிருந்து இவ்வுலகைக் காப்பதற்கு, கிறிஸ்தவக் குடும்பங்கள் ஓர் அரணாக விளங்கட்டும்.

துன்புற்றோரை அன்னையிடம் ஒப்படைத்தேன்

துன்புறுவோர் அனைவரையும் நமது அன்னை கனிவுடன் கண்ணோக்குவாராக. அன்னையின் திரு உருவத்திற்குமுன் நான் செபித்த வேளையில், அயர்லாந்து தலத்திருஅவையின் உறுப்பினர்களால் பல வழிகளில் துன்புற்றோரை அன்னையிடம் ஒப்படைத்தேன். இந்தக் காயம், உண்மையையும், நீதியையும் உறுதியுடன் தொடர்வதற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. இந்தப் பாவங்களுக்காக இறைவனின் மன்னிப்பை நான் இறைஞ்சுகிறேன்.

Knock அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணியாக வந்திருக்கும் வேளையில், வட அயர்லாந்து மக்களை சிறப்பாக வாழ்த்துகிறேன். அயர்லாந்து மக்கள் அனைவரையும் உடன்பிறந்தோராய் காத்து, அரவணைக்க அன்னை மரியாவிடம் வேண்டுகிறேன். அயர்லாந்தில் ஒற்றுமையும், நீதியும், நல்லிணக்கமும் உருவாகவேண்டுமென்று செபிக்கிறேன்.

இக்கருத்துக்கள் அனைத்தையும் இணைத்து, மூவேளை செபத்தின் வழியே, அன்னையின்  பரிந்துரையை வேண்டி, செபிப்போம்.

26 August 2018, 16:03