தேடுதல்

டப்ளின் நகர் பீனிக்ஸ் பூங்காவில் குடும்ப விழா நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் டப்ளின் நகர் பீனிக்ஸ் பூங்காவில் குடும்ப விழா நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நற்செய்தியின் மகிழ்வை பிறருடன் பகிரும் மறைபணியாளராகுங்கள்

அயர்லாந்து திருஅவையில் இடம்பெற்ற கடந்த கால தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பை வேண்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

நற்செய்தியின் மகிழ்வைத் தாங்கிச் செல்பவர்களாக உலகில் செயல்படுங்கள் என குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அயர்லாந்தில் இடம்பெற்ற குடும்பங்களின் உலக மாநாட்டு இறுதித் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் ஒப்புரவிற்கு தடையாக இருப்பனவற்றை அகற்றி, ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பதன் ஆதாரமாக மாறுவதன் வழியாக கிறிஸ்தவக் குடும்பங்கள்,  நற்செய்தியின் மகிழ்வை பரப்பமுடியும் என்றார்.

இருண்டதொரு காலத்தில் வாழ்ந்த ஐரோப்பாவுக்கு, நற்செய்தியின் ஒளியை எடுத்துச் சென்ற புனித கொலம்பன் அவர்களின் எடுத்துக்காட்டையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஃபீனிக்ஸ் பூங்காவில் இடம்பெற்ற இத்திருப்பலியின் துவக்கத்தில், கடந்த காலத்தில் அயர்லாந்து திருஅவையில் இடம்பெற்ற தவறான செயல்களுக்காக மன்னிப்பையும் வேன்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் அதிகாரிகள், சிறார் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது, மற்றும் முக்கிய பொறுப்பிலுள்ளோர் அது குறித்து பாராமுகமாக இருந்தது, ஆகியவை குறித்த தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, அதற்கான மன்னிப்பையும் வேண்டினார்.

திருமணமாகமலேயே குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர், கத்தோலிக்க மையங்களில் தங்கியிருந்தபோது, அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்டது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அத்தாய்மார்கள் மற்றும் பிரித்தெடுக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்னிப்பை வேண்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நாளும், குடும்பங்களின் வாழ்வில், தூய ஆவியார் வழங்கும் கொடை வந்துகொண்டேயிருக்கிறது, இதுவே, இறைவனின் கொடையாகவும் வாக்குறுதியாகவும் உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இக்கொடையை மற்றவர்களுடன் பகிர்வதற்கு, குடும்பங்களுக்கு ஊக்கமளித்தார்.

இயேசுவின் படிப்பினைகள் கடைப்பிடிப்பதற்கு அவ்வளவு எளிதானவை அல்ல, என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டியிருக்கிறது, ஏனெனில், தீமைச் செய்தவர்களை மன்னிப்பதும், குடியேற்றதாரர்களையும் தெரியாதவர்களையும் வரவேற்பதும், ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வதும், பிறக்கவிருக்கும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர், பலவீனர்கள் ஆகியோரை பாதுகாப்பதும், மக்களுக்கு இயலாததாக உள்ளது என்பதை இன்று நேரடியாகவே பார்க்கிறோம், என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நேரங்களில்தான், 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்களும் என்னை விட்டுப் போய்விடப் போகிறீர்களா? என்று, கடவுள் நம்மைப்பார்த்து கேட்கிறார், எனக் கூறினார்.

இத்திருப்பலியின் இறுதியில், அடுத்த உலக குடும்பங்கள் மாநாடு 2021ம் ஆண்டு, உரோம் நகரில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2018, 16:26