ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் 

கடவுளின் கொடைகள் நன்மைகள் ஆற்றுவதற்காகவே

ஒருவர் தன் வாழ்வில் செய்யும் செயல்களுக்கு, அவரே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அச்செயல்களுக்கு அலகையோ, அடுத்தவர்களோ பொறுப்பல்ல - புனித அகுஸ்தீன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

“ஆண்டவர் நமக்கு வளங்களை வழங்கியுள்ளார் என்றால், அவரின் பெயரில் மற்றவர்க்கு நிறைய நற்செயல்களை ஆற்றுவதற்காகவே” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 28, இச்செவ்வாயன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித அகுஸ்தீனார் விழாவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், பிறருக்கு நாம் ஏராளமான நன்மைகள் ஆற்றுவதற்காக, ஆண்டவர் நம்மை வளங்களால் நிறைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும், புனித அகுஸ்தீனார் பற்றி வத்திக்கான் வானொலியில் உரையாற்றியுள்ள புனித அகுஸ்தீன் சபை அருள்பணியாளர் Gabriele Ferlisi அவர்கள், வாழ்வு என்பது அன்பின் பேருண்மை எனவும், ஒரு மனிதரின் வாழ்வின் மதிப்பு, அவர் இதயத்தில் சுரக்கும் அன்பின் தன்மையால் அளக்கப்படும் எனவும், இதுவே புனித அகுஸ்தீனாரின் வாழ்வின் மையமாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

புனிதர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில், புனித அகுஸ்தீனார் சிறந்து விளங்குவதற்கு இது சிறப்பான காரணம் என்று தெரிவித்த, அருள்பணியாளர் Ferlisi அவர்கள், வாழ்வில் அதிகம் உண்மையைத் தேடி அலைந்த புனித அகுஸ்தீனார், இளையோரின் மனங்களை நன்றாகப் புரிந்துகொள்வதை அறிந்திருந்தார் என்றும் கூறினார்.

கி.பி.354ம் ஆண்டில் வட ஆப்ரிக்காவில் பிறந்த, புனித அகுஸ்தீனார், நூறு நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தனது 32வது வயதில் மனம் மாறி திருமுழுக்குப் பெற்ற இவர், ஹிப்போ நகரின் ஆயராகப் பணியாற்றி, 430ம் ஆண்டில் இறைபதம் அடைந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 15:23