தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரையில்  திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

டப்ளின் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபியுங்கள்

நாம் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும், நம் வருங்காலம் குடும்பங்களைச் சார்ந்து உள்ளது – டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலக குடும்பங்கள் மாநாடு, உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவக் குடும்பங்களின் குரலைக் கேட்பதற்குரிய அருளின் நேரமாக அமையச் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

இப்புதன் காலையில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட பன்னாட்டுத் திருப்பயணிகளிடம், டப்ளினில் நடைபெறும் உலக குடும்பங்கள் மாநாட்டில் பங்குபெறுவதற்காக, ஆகஸ்ட் 25,26 ஆகிய தேதிகளில் அங்கு செல்கிறேன், இப்பயணத்திற்காகச் செபியுங்கள் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 22, இப்புதனன்று, அரசியான புனித கன்னி மரியா விழா சிறப்பிக்கப்பட்டதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, துன்ப நேரங்களில் நம் அடைக்கலமாக இருக்கின்ற, இறைவனின் அன்னையாகிய மரியா, தம் மகனை அன்புகூர்ந்ததுபோன்று, நாமும் அம்மகனை அன்புகூர்வதற்கு, நமக்கு அவர் கற்றுக்கொடுப்பாராக என்றும், திருப்பயணிகளிடம் கூறினார்.

இன்னும், இப்புதன் காலையில், பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் சிறிய அறையில், கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களின் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

22 August 2018, 15:22