தேடுதல்

திருத்தந்தைக்காக அயர்லாந்து காத்திருக்கிறது திருத்தந்தைக்காக அயர்லாந்து காத்திருக்கிறது 

அயர்லாந்து திருத்தந்தைக்காக காத்திருக்கின்றது

உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வருகிற சனிக்கிழமையன்று டப்ளின் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஞாயிறு மாலை 3 மணிக்கு, டப்ளின் ஃபோனிக்ஸ் பூங்காவில் திருப்பலி நிறைவேற்றி, இம்மாநாட்டை நிறைவுக்குக் கொண்டு வருவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

 “இன்று, டப்ளினில் உலக குடும்பங்கள் மாநாடு தொடங்குகின்றது. உலகின் அனைத்துக் குடும்பங்களுக்காக, குறிப்பாக, இன்னலிலுள்ள குடும்பங்களுக்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில், ஆகஸ்ட் 21, இச்செவ்வாய் மாலை, 9வது உலக குடும்பங்கள் மாநாடு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துக் குடும்பங்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 25,26ல் டப்ளினில் திருத்தந்தை

மேலும், வருகிற சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு, உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, அன்று காலை 10.30 மணிக்கு டப்ளின் பன்னாட்டு விமான நிலையத்தை அடைவார். அங்கிருந்து அரசுத்தலைவர் மாளிகை சென்று, அங்கு நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்று, மரியாதைநிமித்தம், அரசுத்தலைவரைச் சந்திப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டப்ளின் அரண்மனையில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, மாலை 3.30 மணியளவில் புனித மரியா பேராலயம் செல்வார்.

மாலை 4.15 மணியளவில், டப்ளின் நகரிலுள்ள கப்புச்சின் சபை அருள்பணியாளர்கள் இல்லம் சென்று, வீடற்ற குடும்பங்களுக்கு அச்சபையினர் நடத்தும் இல்லத்தைப் பார்வையிடும் திருத்தந்தை, இரவு 7.45 மணியளவில், Croke பூங்கா அரங்கம் சென்று, உலக குடும்பங்கள் விழாவில் கலந்துகொள்வார்.

ஆகஸ்ட் 26, ஞாயிறு காலை 8.40 மணிக்கு டப்ளின் நகரிலிருந்து Knock நகருக்கு விமானத்தில் புறப்படும் திருத்தந்தை, அந்நகர் அன்னை மரியா திருத்தலத்தில் செபித்து, ஞாயிறு மூவேளை செப உரையும் வழங்குவார். ஞாயிறு மாலை 3 மணிக்கு, டப்ளின் ஃபோனிக்ஸ் பூங்காவில், உலக குடும்பங்கள் மாநாட்டு நிறைவு திருப்பலியை நிறைவேற்றி, உரோம் நகருக்குப் புறப்பட்டு, ஞாயிறு இரவு 11 மணிக்கு உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 15:10