புனித மாக்சிமில்லியன் கோல்பே புனித மாக்சிமில்லியன் கோல்பே 

மறைசாட்சிகள் திருஅவையின் உண்மையான சக்தி

புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்கள், இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களை மறைத்து வைத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, ஆஷ்விஷ் வதைமுகாமில் சித்ரவதைகளுக்கு உள்ளாகி இறந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

“இன்றும் ஏராளமான மறைசாட்சிகள் உள்ளனர், கிறிஸ்துவின் மீதுள்ள அன்பால், ஏராளமான மக்கள், சித்ரவதைப்படுத்தப்படுகின்றனர், இவர்களே, திருஅவையின் உண்மையான சக்தி” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வயான்று தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மறைசாட்சி புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்களின் விழாவான ஆகஸ்ட் 14, இச்செவ்வயான்று, அப்புனிதரை தன் டுவிட்டரில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைசாட்சிகள் திருஅவையின் உண்மையான பலம் என்று கூறியுள்ளார்.

புனித மாக்சிமில்லியன் கோல்பே

அக்காலத்தில் இரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த, போலந்தின் Zdunska Wola என்ற ஊரில், 1894ம் ஆண்டு சனவரி 8ம் தேதி பிறந்த, புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்கள், தனது பத்தாவது வயதில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்டவர். இவர் தனது 13வது வயதில், ஆஸ்டிரிய-ஹங்கேரியில் இருந்த பிரான்சிஸ்கன் குருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். 1918ம் ஆண்டில் குருவான இவர், புதிதாக சுதந்திரம் அடைந்திருந்த போலந்து நாட்டிற்கு 1919ம் ஆண்டு திரும்பினார்.

இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்களை மறைத்து வைத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, ஹிட்லரின் ஆஷ்விஷ் நாத்சி வதை முகாமுக்கு இவர் அனுப்பப்பட்டார். அச்சமயத்தில், 1941ம் ஆண்டு ஜூலையில், இப்புனிதர் அடைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து, ஒரு கைதி தப்பித்துச் சென்றார். எனவே மற்றவரும் தப்பித்துச் செல்லாதவாறு, சிறைக் காவலர்கள், பத்துப்பேரைத் தெரிவுசெய்து கடும் பசியால் இறக்கும் தண்டனையைக் கொடுத்தனர். இப்புனிதர் அவர்களில் ஒருவராக இல்லாவிடினும், சாவுக்கு அஞ்சிய, இளைஞரான ஒரு குடும்பத் தலைவரைக் காப்பாற்றுவதற்காக, இந்தப் பத்துப் பேருடன் சேர்ந்தார். முகாமில் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளான புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்கள், 1941ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாளன்று, தனது 47வது வயதில் இறந்தார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்களை, 1982ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாளன்று புனிதர் என அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 13:47