புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

"சாட்சிய வடிவங்களில் மிக சக்தி வாய்ந்தது, பிறரன்பு"

ஆகஸ்ட் 2 முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.641. அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 77 இலட்சம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"சாட்சிய வடிவங்களில் மிக சக்தி வாய்ந்தது, பிறரன்பு, ஏனெனில், அதன் வழியே, கடவுளின் அன்பை மக்கள் காண்கின்றனர்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 2, இவ்வியாழன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, 2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அதாவது, 12-12-12 என்ற எண்ணிக்கை கொண்ட சிறப்பான நாளில், அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்கள், டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 2, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,641 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 77 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தையின் இன்ஸ்டக்ராம்

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் இன்ஸ்டக்ராம் முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 576 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 57 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2018, 15:28