தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

கடவுளின் மாபெரும் செயல்களை அமைதியில் தியானிக்க..

பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில் எழுப்பப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள் வழங்கப்பட்டு, அனைவருக்கும், நீதியான தீர்வு அளிக்கப்படுவதற்கு, சிலே ஆயர் பேரவை முயற்சித்து வருகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“நம் கற்பனைக்கெட்டாத கடவுளின் வேலைப்பாடுகளை, அமைதியில் தியானிப்பதன் வழியாகக் கற்றுக்கொள்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இவ்வெள்ளிக்கிழமை காலையில், சிலே நாட்டு ஆயர் ஹூவான் இஞ்ஞாசியோ கொன்சாலெஸ் அவர்களையும், பாலியல் முறைகேடுகள் தடுப்பு மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் சிலே நாட்டு தேசிய அவைத் தலைவர் அன்னமரியா சேலிஸ் புருனெட் அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

இச்சந்திப்பு பற்றி, இவ்வெள்ளிக்கிழமை மாலையில் அறிக்கை வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் உதவி இயக்குனர் Paloma Garcia Ovejero அவர்கள், சிலே நாட்டில் பாலியல் முறைகேடுகளைக் களைவதற்கும், அத்தகைய குற்றங்கள் மீண்டும் ஒருபோதும் இடம்பெறாமல் தடுப்பதற்கும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றி திருத்தந்தையிடம் பகிர்ந்துகொள்வதற்காக, இச்சந்திப்பு நடைபெற்றது என்று தெரிவித்தார்.

சிலே நாட்டில் அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள், அத்துன்பங்களை அகற்றும் வழிகள் மற்றும் அவர்களுக்கு அவசியமான ஆறுதல் நடவடிக்கைகள் பற்றி, இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்றும், Garcia Ovejero அவர்கள் கூறினார்.

11 August 2018, 14:39