தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை  (Vatican Media )

Knights of Columbus அமைப்பின் பிறரன்பு பணிகளுக்கு நன்றி

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோரில் 136வது உச்சி மாநாட்டை (ஆகஸ்ட் 7-9), நடத்திய Knights of Columbus கத்தோலிக்க பிறரன்பு அமைப்பினருக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

மேரி தெரேசா – வத்திக்கான்

மிகவும் நலிவடைந்த நம் சகோதரர், சகோதரிகளுக்கு அர்ப்பணத்துடன் சேவைபுரியும்போது, எல்லையில்லா அன்பை நாம் அனுபவிக்கின்றோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை டுவிட்டரில், செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும், ஏழைகள் மற்றும் தேவையில் இருக்கும் மக்களுக்கு, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டுணர்வுச் செயல்களை ஆற்றுவதன் வழியாக, இறையன்புக்குச் சான்றுபகர, எல்லா நிலைகளிலும் முயற்சித்துவரும் Knights of Columbus அமைப்பினரை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பத்தின் நற்செய்தி

பால்டிமோரில், ஆகஸ்ட் 09, இவ்வியாழனன்று, மூன்று நாள் மாநாட்டை நிறைவுசெய்த, Knights of Columbus உலகளாவிய அமைப்பினருக்கு அனுப்பிய செய்தியில், குடும்பத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்கும், கத்தோலிக்கத் தம்பதியர், தங்களின் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, திருமணம் மற்றும் குடும்பத்தின் இயல்பை காப்பதற்கும், இந்த அமைப்பினர் தங்களை அர்ப்பணித்து, பணியாற்றுவதைப் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்திக்கு முரணாண ஒளிகளால் நிறைந்திருக்கும் இவ்வுலகில் வாழ்கின்ற, புதிய தலைமுறைகளாகிய இளையோர், கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு, இந்த அமைப்பினர் தொடர்ந்து வழிகாட்டுவார்கள் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய கிழக்கில் அமைதிக்காக செபம்

தங்களின் விசுவாசத்திற்காக, காழ்ப்புணர்வுகளையும், சித்ரவதைகளையும் எதிர்கொள்ளும், கிறிஸ்தவ சமூகத்தின் உறுப்பினர்களுக்கு Knights of Columbus அமைப்பு ஆற்றிவரும் பிறரன்பு பணிகளுக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.   

மத்திய கிழக்கில் அமைதி நிலவவும், இதயங்கள் மனம் மாறவும், அப்பகுதியின் ஆயுத மோதல்களுக்கு நீதியான தீர்வு காணப்படுவதற்கு, உண்மையான  உரையாடல் இடம்பெறவும், Knights of Columbus அமைப்பினர் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, Knights of Columbus உலகளாவிய அமைப்பினர், திருத்தந்தையின் விண்ணப்பத்தின்பேரில், மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களுக்கு, முப்பது இலட்சம் டாலர் நிதியுதவி செய்துள்ளனர்.

10 August 2018, 15:11