புனித பேதுரு வளாகத்தில் பீடப்பணியாளரைச் சந்திக்கும் திருத்தந்தை புனித பேதுரு வளாகத்தில் பீடப்பணியாளரைச் சந்திக்கும் திருத்தந்தை 

திருத்தந்தை: புனிதம், சோம்பேறிகளின் பாதை அல்ல

"புனிதத்தின் பாதை சோம்பேறிகளின் பாதை அல்ல; இரக்கத்தின் செயல்களைக் கற்றுக்கொள்ள எந்தப் பல்கலைக்கழகமும் தேவையில்லை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 70,000த்திற்கும் அதிகமான பீடப்பணியாளர்களிடம் கூறினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எல்லாவற்றையும் கடவுளின் மாட்சிக்காகவே செய்வது (1 கொரி. 10:31), கிறிஸ்துவின் நண்பராக இருப்பதன் முழுப்பொருளை உணர்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பீடப்பணியாளார்களிடம் கூறினார்.

திருவழிபாடுகளில் அருள்பணியாளர்களுக்கு உதவிவரும் பீடப்பணியாளர்களின் 12வது திருப்பயணத்தையொட்டி, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 70,000த்திற்கும் அதிகமான இளையோரை, ஜூலை 31, இச்செவ்வாய் மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

அனைவருக்கும் உகந்தவராய் இருப்பது

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 10ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ஒரு பகுதியை (1 கொரி. 10:31-11:1) மையப்படுத்தி, திருத்தந்தை, இச்சந்திப்பின்போது, தன் உரையை வழங்கினார்.

நாம் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவர்களாய் இருக்கும்போது, நம் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும், ஆண்டவர் இயேசுவை அறிந்துகொள்வதற்கு அது உதவியாக இருக்கும் என்று, திருத்தந்தை, பீடப்பணியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

புனிதம், சோம்பேறிகளின் பாதை அல்ல

கிறிஸ்துவையும், அவரது புனிதர்களையும் பின்பற்றுவது எளிதான செயல் அல்ல, ஆனால், அதே நேரம் அது முடியாத செயலும் அல்ல என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்தின் பாதை, சோம்பேறிகளின் பாதை அல்ல என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இரக்கத்தின் செயல்களும் வாழ்வுக்கு இன்றிமையாதவை என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் செயல்களைக் கற்றுக்கொள்ள, நாம், எந்த பல்கலைக்கழகத்திற்கும் செல்லத் தேவையில்லை என்று எடுத்துரைத்தார்.

கடவுளின் மகிமைக்காக வாழ்ந்த புனிதர்

புனிதத்தின் பாதையில் நம்மை வழிநடத்தும் திசைகாட்டும் கருவி, கடவுளின் மாட்சி ஒன்றே என்று கூறிய திருத்தந்தை, தன் சொந்த மகிமையைத் தேடிச் சென்ற லொயோலாவின் புனித இக்னேசியஸ், கடவுளின் மகிமைக்கென தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்பதை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.    

“அமைதியை நாடித் தேடு” என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற பீடப்பணியாளர்களின் 12வது பன்னாட்டுத் திருப்பயணத்தில் கலந்துகொள்ள 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உரோம் நகருக்கு வருகை தந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 15:17