சிலே ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் சிலே ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

சிலே ஆயர்களின் முயற்சிகளுக்கு திருத்தந்தை நன்றி

ஆகஸ்ட் 5, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே ஆயர் பேரவைத் தலைவருக்கு கைப்பட எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில், பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக ஆயர்கள் எடுத்துள்ள, உறுதியான முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பகிர்ந்து கொள்வதை, கேட்கத் தவறியது குறித்து, ஆயர்கள் சிந்தித்து வருவதற்கு நன்றி கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றிணைந்த சிலே திருஅவை சமூகத்திற்கு, ஆயர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் விளங்குகிறார்கள் என்று எழுதியுள்ள திருத்தந்தை, அந்த நன்றிக் கடிதத்தை, சிலே ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Santiago Silva Retamales அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

“சிலே ஆயர் பேரவையின் அர்ப்பணம், அறிக்கை, மற்றும் தீர்மானங்கள்” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுவதற்கு, சிலே ஆயர்கள், சிந்தித்து, தெளிந்து தேர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றிய முறை, தன்னை மிகவும் கவர்ந்தது என்றும், அதில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.   

சிலே ஆயர்களின் தீர்மானம், எதார்த்தமானது மற்றும் தெளிவானது என்றும், பிரச்சனையை எதிர்கொள்வதற்கு, இது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறைவனின் புனித மக்களை வழிநடத்துவதில், சிலே ஆயர் பேரவை ஒன்றிணைந்து செயல்பட்டது, சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.

ஆயர்களின் ஒன்றிணைந்த இம்முயற்சிக்கு, ஆண்டவர், அபரிவிதமாகப் பலன்களைத் தருவாராக எனவும் செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, சிலே ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு குருகுலத்தால் செய்யப்பட்ட அநீதிகள் மற்றும் கடுமையான பாவங்களால், துன்பங்களை அனுபவித்தவர்களுடன் உடனிருந்து உதவத் தவறியதற்காக, மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2018, 15:40