திருத்தந்தையின் மூவேளை செப உரை 190818 திருத்தந்தையின் மூவேளை செப உரை 190818 

திருப்பலியில் விண்ணகத்தின் முன்சுவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 19, ஞாயிறு மூவேளை செப உரையில் கிறிஸ்துவின் திருநற்கருணை குறித்த சிந்தனைகளை வழங்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருப்பலிக்குச் செல்வதும், திருநற்கருணை வாங்குவதும் மிகவும் முக்கியமானது, ஏனெனில், திருநற்கருணை வாங்குகையில், நம் மனதை மாற்றி, விண்ணகத்திற்கு நம்மைத் தயாரிக்கும் உயிருள்ள கிறிஸ்துவை உட்கொள்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

திருநற்கருணை குறித்த இயேசுவின் உரையின் இரண்டாம் பகுதியைக் கொண்டிருக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (யோவா.6:51-58) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணையில் இயேசு, வானினின்று இறங்கிவந்த உணவாக வருகிறார் என்று கூறினார்.

மேலும், நான் கொடுக்கும் உணவு, என் சதையே, அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் என்றும், மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்றும் இயேசு கூறியவேளையில், அவரோடு ஒன்றித்திருக்கவும், அவரை உண்டு, அவரோடு பகிர்ந்து வாழவும், இயேசு தங்களை அழைக்கிறார் என, மக்கள் புரிந்துகொண்டனர் என்றுரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணகத்தின் முன்சுவை மண்ணகத்தில்

கிறிஸ்துவின் திருஉடலும், திருஇரத்தமுமாகிய இந்த வாழ்வு தரும் உணவு, திருநற்கருணை விருந்தில், நம்மிடம் இலவசமாக வருகின்றது என்று கூறியத் திருத்தந்தை, நாம் திருப்பலியில் பங்குகொள்ளும் ஒவ்வொரு நேரமும், விண்ணகத்தை ஏற்கனவே, இம்மண்ணகத்தில் அனுபவிக்கின்றோம் என்று கூறினார்.

இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமுமாகிய திருநற்கருணை உணவிலிருந்து, விண்ணக வாழ்வு என்பது என்ன என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, நாம் இயேசுவில் நிறைவடையும்பொருட்டு, அவரின் திருவிருந்திற்கு நம்மை அழைப்பதில், அவர் ஒருபோதும் சோர்வே அடைவதில்லை எனவும் கூறினார்.

இயசுவின் திருவுணவில் நம்மை ஊட்டம்பெறச்செய்யும்போது, கிறிஸ்துவின் உணர்வுகள் மற்றும் அவர் செயலாற்றும் முறைகளோடு, அவரோடு முழுமையாய் ஒன்றிக்கும் சக்தியைப் பெறுகிறோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2018, 13:31