தேடுதல்

திருத்தந்தையின் ஆகஸ்ட் 2018 செபக் கருத்து காணொளி திருத்தந்தையின் ஆகஸ்ட் 2018 செபக் கருத்து காணொளி 

'குடும்பங்கள் எனும் கருவூலம்' - செபக்கருத்து

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் உலக குடும்பங்கள் மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆகஸ்ட் மாத செபக்கருத்தை குடும்பங்களுக்காக அர்ப்பணித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆகஸ்ட் மாதத்திற்குரிய செபக்கருத்தை, திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இயேசு சபை அமைப்பினர், The Pope Video காணொளி வழியே, ஜூலை 2, இவ்வியாழன் மாலை வெளியிட்டுள்ளனர்.

'குடும்பங்கள் எனும் கருவூலம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இம்மாத செபக்கருத்தின் வழியே, மனிதகுலத்தின் கருவூலமாக விளங்கும் குடும்பத்திற்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

குடும்பம் என்ற புதையல்

குடும்பங்கள் என்றதும், புதையல் என்ற உருவகம் தன் நினைவுக்கு வருகிறது என்று இக்காணொளியின் துவக்கத்தில் குறிப்பிடும் திருத்தந்தை, இன்றைய உலகின் பல்வேறு அழுத்தங்களால், குடும்பம் என்ற புதையலை இழந்துவிடும் ஆபத்தில் நாம் இருக்கிறோம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

இந்தப் புதையலின் முக்கியத்துவத்தை அரசுகளும், அரசியல் தலைவர்களும் உணர்ந்து, அதற்கேற்றதுபோல் தங்கள் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தைக் குறித்து எடுக்கும் தீர்மானங்களில், சமுதாயத்தின் புதையலாக விளங்கும் குடும்பங்களைப் பாதுகாக்கும் முடிவுகளை அவர்கள் எடுக்கவேண்டுமென இயேசுவிடம் வேண்டிக்கொள்வோம் என்பதை, திருத்தந்தை, தன் ஆகஸ்ட் மாத செபக்கருத்தாக வெளியிட்டுள்ளார்.

உலக குடும்பங்கள் மாநாட்டிற்கு தயாரிப்பாக...

ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி முதல், 26ம் தேதி முடிய, அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் உலக குடும்பங்கள் மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆகஸ்ட் மாத செபக்கருத்தை குடும்பங்களுக்காக அர்ப்பணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2018, 15:22