தேடுதல்

Vatican News
38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணம் மேற்கொண்ட  இளையோர் சந்திப்பு 38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணம் மேற்கொண்ட இளையோர் சந்திப்பு 

38வது பிரான்சிஸ்கன் நடைப்பயண இளையோர் சந்திப்பு

தங்களின் அகவாழ்வுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும், இளையோர், பிரான்சிஸ்கன் நடைப்பயணத்தில் பங்கெடுத்து வருகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணத்தில் பங்கெடுத்து உரோம் வந்துசேர்ந்த இளையோர் குழுவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இத்தாலியின் லொரேத்தோவிலிருந்து அசிசி வழியாக மேற்கொண்ட திருப்பயணத்தில், 117 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக உரோம் வந்துசேர்ந்த இளையோரைச் சந்தித்த திருத்தந்தை, பாதை, மகிழ்வு, அழைப்பு ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்திப் பேசினார் என்று,  திருப்பீட தகவல் தொடர்பகத்தின் உதவி இயக்குனர், தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார். அதோடு, வெளிவேடம் குறித்தும், திருத்தந்தை எச்சரித்தார் என, அந்த டுவிட்டர் செய்தி கூறுகின்றது.

சிர்கோ மாஸ்ஸிமோ திடலில் இளையோர் சந்திப்பு

மேலும், உரோம், சிர்கோ மாஸ்ஸிமோ திடலில், இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து நடைப்பயணமாக வந்த எழுபதாயிரத்திற்கும் அதிகமான இளையோரை, ஆகஸ்ட் 11, இச்சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புகழ்பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் பக்திப்பாடல்கள், நடனங்கள் நிறைந்த மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருவதோடு, மாலை செப வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.

மேலும், ஆகஸ்ட் 12, ஞாயிறு காலை 9.30 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்ளும் இளையோரை, திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை சந்திப்பார். இளையோரை வாழ்த்தியவண்ணம் வளாகத்தை வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லொரேத்தோ மரியன்னை திருவுருவத்தையும், இளையோர் உலக நாள் சிலுவையையும் அர்ச்சித்தபின், அவர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்குவார்.

11 August 2018, 14:43