தேடுதல்

திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அயர்லாந்து திருத்தூதுப்பயணம் - ஒரு முன்தூது

அயர்லாந்தின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில், கத்தோலிக்கத் திருஅவை நல்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

குடும்பம் உறவுகளின் உன்னதம். அது பாசத்தின் பிறப்பிடம். அது ஓர் அழகான தோட்டம். இந்தத் தோட்டம், இன்றைய மாறிவரும் கலாச்சாரச் சூழலில், பல இடங்களில் தன் பொலிவை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இந்நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம் வாழ்வின் தொட்டில். அன்பு மற்றும் ஏற்பின் பள்ளிக்கூடம். குடும்பம் என்ற ஜன்னல், கடவுளின் பேருண்மைக்கு நம்மைத் திறந்து விடுகின்றது. நாம் எல்லாரும் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். வருங்காலம் குடும்பத்தைச் சார்ந்து உள்ளது என்று கூறியுள்ளார். திருஅவையும், கிறிஸ்தவ சபைகளும், பன்னாட்டு அமைப்புகளும், பாரம்பரிய குடும்ப அமைப்பைக் கட்டியெழுப்ப பல வழிகளில் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆகஸ்ட் மாதச் செபக்கருத்தையும், 'குடும்பங்கள் எனும் கருவூலம்' என்று தலைப்பிட்டு, குடும்பங்களுக்காக செபிக்க அழைப்பு விடுத்துள்ளார். குடும்பங்கள் என்றதும், புதையல் என்ற உருவகம் என் நினைவுக்கு வருகிறது என்று சொல்லி, இன்றைய உலகின் பல்வேறு அழுத்தங்களால், குடும்பம் என்ற புதையலை இழந்துவிடும் ஆபத்தில் நாம் இருக்கிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத் திருஅவை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஏதாவது ஒரு நாட்டில் உலக குடும்பங்கள் சந்திப்பை நடத்தி வருகின்றது. உலக குடும்பங்கள் மாநாடாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு, திருத்தந்தையரும் சென்று சிறப்பிக்கின்றனர்.  2018ம் ஆண்டு ஆகஸ்ட் 21, இச்செவ்வாயன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் 9வது உலக குடும்பங்கள் மாநாடு ஆரம்பித்துள்ளது. இம்மாநாடு, ஆகஸ்ட் 26, வருகிற ஞாயிறன்று நிறைவடைகின்றது. டப்ளின் நகரில் நடைபெற்றுவரும் 9வது உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 25, வருகிற சனிக்கிழமையன்று அயர்லாந்து செல்கிறார். இப்பயணம், திருத்தந்தையின் 24வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகும்.

அயர்லாந்தின் புவியியல் அமைப்பு

அயர்லாந்து குடியரசு, வட மேற்கு ஐரோப்பாவில், இறையாண்மை கொண்டு விளங்குகிறது. வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு நாடு, வட கால்வாய், அயர்லாந்து கடல், புனித ஜார்ஜ் கால்வாய் ஆகியவற்றால், பிரிட்டனிடமிருந்து பிரிந்துள்ளது. பிரித்தானிய தீவுகளில் இரண்டாவது பெரிய தீவாகவும், ஐரோப்பாவில் மூன்றாவது பெரிய தீவாகவும், இப்பூமியில், இருபதாவது பெரிய தீவாகவும் அயர்லாந்து அமைந்துள்ளது. இந்நாடு, பிரிட்டனின் ஒரு பகுதியாகிய வட அயர்லாந்துடன் தரைப்பகுதி எல்லையைக் கொண்டுள்ளது மேலும், இது, இத்தீவின் ஆறில் ஐந்து பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. அயர்லாந்தின் மக்கள் தொகை ஏறத்தாழ எழுபது இலட்சமாகும். ஐரோப்பாவில், பிரிட்டனுக்கு அடுத்து, மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டிருக்கும் இரண்டாவது பெரிய தீவாகும். வட அயர்லாந்தில், 18 இலட்சத்துக்கு சற்று அதிகமாக மக்கள் வாழ்கின்றனர். அயர்லாந்தின் பெரிய நகரமும், தலைநகரமுமான டப்ளின், இத்தீவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அயர்லாந்தின் மொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியினர் டப்ளின் நகரில் வாழ்கின்றனர்.

மலைகள் நிறைந்த இந்நாட்டில், கப்பல் போக்குவரத்து நடைபெறும் அளவுக்கு ஆறுகள் உள்ளன.  மத்திய காலங்கள் வரை அடந்த காடுகள் நிறைந்திருந்த இந்நாட்டில், 2013ம் ஆண்டில், 11 விழுக்காட்டுப் பகுதியே காடுகளால் நிறைந்திருந்தது. அயர்லாந்தில் 26 வகையான பாலூட்டி உயிரினங்கள் உள்ளன. அட்லாண்டிக் பெருங்கடல் காலநிலையைக் கொண்டுள்ள இந்நாட்டில், மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். ஏறத்தாழ 12 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்நாட்டில் மனிதர் வாழத் தொடங்கியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்தின் அரசியலமைப்பு

அயர்லாந்தில், Gaelic இன கலாச்சாரம் மற்றும் அரசியல் அமைப்புமுறை, முதல் நூற்றாண்டிலேயே நிலவி வந்துள்ளது. 1922ம் ஆண்டில் தொடங்கிய அயர்லாந்து உள்நாட்டுப் போரின் விளைவாக இடம்பெற்ற, ஆங்கிலேய-அயர்லாந்து ஒப்பந்தத்தின்கீழ், 1922ம் ஆண்டில் சுதந்திர அயர்லாந்தாக, இந்நாடு மாறியது. 1937ம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1949ம் ஆண்டில், குடியரசாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1955ம் ஆண்டு டிசம்பரில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுப்பினரானது. இரண்டாம் உலகப் போரில் நடுநிலைமை வகித்தாலும், ஐம்பதாயிரத்துக்கு அதிகமான அயர்லாந்து மக்கள், பிரிட்டனின் ஆயுதப் படைகளில் இருந்தனர். 1973ம் ஆண்டில், பிரிட்டன் மற்றும் டென்மார்க் நாடுகளுடன் இணைந்து, அயர்லாந்தும், ஐரோப்பிய பொருளாதார அவையில் இணைந்தது. 1999ம் ஆண்டில், அயர்லாந்து, அமைதிக்கான Nato அமைப்பில் இணைந்தது. ஐரோப்பிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, 2002ம் ஆண்டில் யுரோ பணத்தையும், தன் நாட்டின் பணமாக ஏற்றுக்கொண்டது அயர்லாந்து. இந்நாட்டின் கலாச்சாரமும், பிற நாடுகளின் கலாச்சாரங்களில், குறிப்பாக, இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Taoiseach எனப்படும் அயர்லாந்தின் தற்போதைய பிரதமர் Leo Varadkar ஆவார். இவர் 2017ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியிலிருந்து ஆட்சியிலிருக்கிறார். அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் Michael D. Higgins என்பவராவார்.

அயர்லாந்தில் கிறிஸ்தவம்

அயர்லாந்து தீவில் கிறிஸ்தவம் மிகப்பெரிய மதமாகும். இத்தீவு நாட்டில் 87.4 விழுக்காட்டினர் திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்கர். வட அயர்லாந்தில் இவ்வெண்ணிக்கை 43.8 விழுக்காடாகும். இப்பகுதியில் பிரிந்த கிறிஸ்தவ சபையினரே அதிகம். அயர்லாந்து தீவில், ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிறிஸ்தவம் வேரூன்றி, Palladius, புனித பாட்ரிக் ஆகிய மறைப்பணியாளர்களால் பரவத் தொடங்கியது. ஏறத்தாழ கி.பி.432ம் ஆண்டில் புனித பாட்ரிக், அந்நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்றார். இப்புனிதர், அயர்லாந்தின் திருத்தூதர் மற்றும் அந்நாட்டின் பாதுகாவலராவார். அயர்லாந்தில் புதிதாகப் பரவத் தொடங்கிய கிறிஸ்தவம், அந்நாட்டின் வரலாற்றிலும், சமுதாயத்திலும் முக்கிய பங்காற்றியது. அயர்லாந்து முழுவதும் பல துறவு இல்லங்கள் கட்டப்பட்டு, இளவரசர்கள், இளவரசிகள் உட்பட பலர் துறவு வாழ்வை மேற்கொண்டனர். அயர்லாந்து மறைபோதகர்கள் வெளிநாடுகளில் நற்செய்தி அறிவிக்கச் சென்றனர். துறவு இல்லங்கள் மொழிகளையும், இலக்கியத்தையும், கலைகளையும் கற்றுக்கொடுத்தன. இவை எந்த அளவுக்கு இருந்த தென்றால், ஐரோப்பா முழுவதிலிமிருந்து பெருமளவில் மக்கள், கல்வி கற்பதற்காக அயர்லாந்துக்குச் சென்றனர்.     

12ம் நூற்றாண்டில் Norman இனத்தவர் அயர்லாந்தை ஆக்ரமிக்கத் தொடங்கியதையடுத்து, பிரித்தானியர்கள் அயர்லாந்தில் குடியேறி தங்களின் காலனியாக அதை மாற்றினர். ஆங்கிலேயர்கள், அயர்லாந்து விவகாரத்தில் தலையிடவும் தொடங்கினர். புதிய சட்டங்களைப் புகுத்தி அயர்லாந்து கத்தோலிக்கரை நசுக்கத் தொடங்கினர். அயர்லாந்தில் அனைத்து துறவு இல்லங்களும் மூடப்பட வேண்டுமென கட்டளையிட்டனர். 1533 மற்றும் 1538ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் சீர்திருத்தம் நுழைந்து, அயர்லாந்தின் அரசராக, இங்கிலாந்தின் 8ம் ஹென்ரி தன்னை அறிவித்தார். இதனால், அயர்லாந்து கத்தோலிக்கர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். 1829ம் ஆண்டின் ரோமன் கத்தோலிக்க விதிமுறையின்கீழ், கத்தோலிக்கருக்கெதிரான குற்றவியல் தண்டனை சட்டம் அகற்றப்பட்டது. இது, அயர்லாந்து தீவில், 19ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத் திருஅவை மீண்டும் புதுபிறப்படைய உதவியது. 1831ம் ஆண்டில் Galwayல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. 1875ம் ஆண்டில், Maynoothல், கத்தோலிக்க தேசிய பொது அவை நடத்தப்பட்டது. 1979ம் ஆண்டு செப்டம்பர் 29லிருந்து, அக்டோபர் முதல் தேதி வரை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அயர்லாந்துக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயர்லாந்துக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இப்பயணம், அயர்லாந்து கத்தோலிக்கரை விசுவாசத்தில் ஆழப்படுத்தவும், உறுதியான கிறிஸ்தவ குடும்பங்களை உருவாக்கவும் உதவும் என நம்புவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2018, 14:55