தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 01082018 புதன் மறைக்கல்வியுரை 01082018 

திருத்தந்தை : நானே உன் கடவுளாகிய ஆண்டவர்

உண்மைக் கடவுளைவிட்டு விலகிச் சென்று, நம் சுயநல ஆசைகளுக்கு இயைந்த வகையில் நம்மால் உருவாக்கப்பட்ட பொய்க் கடவுளை வணங்கும் சோதனை அனைவருக்கும் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலிக்கு இது கோடை காலம் என்பதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சித்திரை மாத கத்திரி வெயிலை ஒத்திருக்கும் ஆகஸ்ட் மாதத்தின் உரோம் நகர் வெயில். ஏனெனில், குளிரிலேயே பழக்கப்பட்டவர்களுக்கு இந்த வெயில் சிறிது கடுமையானதுதான். இதன் காரணமாக திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வி உரை அருளாளர், திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் இடம்பெற்றது. கடந்த மாதம் முழுவதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுமுறையில் இருந்ததால், அவரின் புதன் மறைக்கல்வி உரைகள் இடம்பெறவில்லை என்பது நாம் அறிந்ததே. இறைவன் வழங்கிய கட்டளைகள் குறித்து ஜூன் மாதத்தில், மறைக்கல்வியுரைகளை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மாத  இடைவெளிக்குப்பின் அத்தலைப்புடனேயே தொடர்ந்தார்.

அன்பு சகோதர சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி உரையை மீண்டும் துவக்கும் இவ்வேளையில், முதல் கட்டளை குறித்து காண்போம். 'நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது'(வி.ப. 20:3) என்கிறார் கடவுள். நம் ஆண்டவர் மட்டுமே கடவுள். அவரே நம் வாழ்வு மற்றும் மதிப்பீடுகளின் மையமாக இருத்தல் வேண்டும். மாறாக, நாமே உருவாக்கிக்கொண்ட ஒரு கருத்தாகவோ, பொருளாகவோ, உருவமாகவோ அவர் இருத்தல் ஆகாது. உண்மையான கடவுளைவிட்டு விலகி, நாமே நம் சுயநல ஆசைகளுக்கு எற்ப உருவாக்கிக்கொண்ட பொய்க் கடவுளை வணங்கும் சிலை வழிபாடு குறித்த சோதனைகளை நாம் எல்லாருமே பெறுகிறோம். நாமே உருவாக்கிக்கொண்ட இத்தகைய சிலைகள், நம் வழிபாடுகளையும் பலிகளையும் எதிர்பார்க்கின்றன(வி.ப. 20:4-5). எவ்வளவு தடவைகள் நம் வாழ்வில் பணம் என்பது முக்கியத்துவம் பெற்றதாக மாறி, அச்சிலைக்காக, அந்த பொய் தெய்வத்திற்காக நம் குழந்தைகளைத் தியாகம் செய்யவும், அவர்களைப் புறந்தள்ளவும், அவர்களை இவ்வுலகிற்குக் கொணர மறுத்தும் உள்ளோம்? இறுதியில், இச்சிலைகள் நம்மை அடிமைப்படுத்துகின்றன. தங்களால் தர முடியாத ஒரு மகிழ்ச்சியை இந்தச் சிலைகள் நமக்கு வாக்குறுதியளிக்கின்றன. இதற்கு மாறாக, உண்மைக் கடவுள் வழிபாடோ, உண்மை விடுதலையையும், மகிழ்ச்சியையும், அளவிடமுடியாத வாழ்வையும் கண்டுகொள்ள, அன்பில் நமக்குக் கற்பிக்கிறது. இறைவனை நம் வாழ்வின் மையமாக மாற்றவும், சிலைவழிபாட்டிற்குரிய சோதனையை உதறித் தள்ளவும், நீடித்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கொணரவல்ல தெய்வீக அன்பு குறித்து நம் கண்களைத் திறக்கவும் உதவும் அருளை வழங்குமாறு இறைவனிடம் வேண்டுவோம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் குழுமியிருந்தோருக்கு தன் வாழ்த்துக்களையும் ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

Photogallery

புதன் மறைக்கல்வியுரை 010818
01 August 2018, 15:12