தேடுதல்

குருத்து ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் குருத்து ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கருக்கு கடிதம்

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளுக்குப் பிராயச்சித்தமாக, செபம் மற்றும் உண்ணா நோன்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென, திருஅவையைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் அருள்பணியாளர்களால் நடத்தப்பட்ட பாலியல் முறைகேடுகள் மற்றும் அவை மறைத்து வைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, உலகின் அனைத்து கத்தோலிக்கருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 20, இத்திங்களன்று, இறைமக்களுக்கு என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள நீண்ட கடிதத்தில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் வேதனைகளை அனுபவிக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தக் குற்றங்களை வேரோடு களைந்தெறிவதற்கு எடுக்கப்படும் எல்லா முயற்சிகளிலும், பொதுநிலை கத்தோலிக்கர் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, தங்களையே மதிக்கும் குருகுல கலாச்சாரத்தையும், சிறாரின் பாதுகாப்பைவிட, தங்களின் புகழ் மீது மிகுந்த அக்கறை காட்டிய திருஅவைத் தலைவர்களையும் குறை கூறியுள்ளார்.

சிறார் மீது அக்கறை காட்டாமல், அவர்களை நாம் கைவிட்டுவிட்டோம் எனவும், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அருள்பணியாளர்களால் நடத்தப்பட்ட பாலியல் முறைகேடுகள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டன அல்லது, வெளியில் தெரியாமல் அமைதியாக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய குற்றங்களையும், அவை மூடிமறைத்து வைக்கப்படுவதையும் தடுப்பதற்கு திருஅவை எல்லா முயற்சிகளையும் எடுக்கும் எனவும், உலக கத்தோலிக்கருக்கு திருத்தந்தை உறுதியளித்துள்ளார்.

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்து ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவும், அந்தக் குற்றங்களுக்குப் பரிகாரமாக, செபம் மற்றும் உண்ணா நோன்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் குறித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனிய மாநிலத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பல விவகாரங்கள், கடந்தகாலத்தில் நடந்தவை எனவும், இக்குற்றங்கள் புறக்கணிக்கப்பட்டது தெளிவாகத் தெரிகின்றது எனவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்குற்றங்களால் பாதிக்கப்பட்ட குறைந்தது ஆயிரம் பேரின் அனுபவங்களை, அந்த அறிக்கை விரிவாக வெளியிட்டுள்ளது என்றும், இவர்களின் காயங்கள் ஒருபோதும் மறையாது மற்றும், அந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பதற்குரிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை திருஅவை அறிந்திருக்கின்றது என்றும் எழுதியுள்ள திருத்தந்தை, இந்த மரணக் கலாச்சாரத்தைக் களைந்தெறிய ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2018, 16:14