திருத்தந்தை ஆறாம் பவுல் திருத்தந்தை ஆறாம் பவுல் 

நவீன காலத்தின் உன்னத திருத்தந்தை

அக்டோபர் 14ம் தேதி புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் திருத்தந்தை 6ம் பவுல், நவீன காலத்தின் உன்னதத் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருளாளர், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் இறந்ததன் 40வது நினைவு நாள் இத்திங்களன்று திருஅவையில் நினைவுகூரப்படுவதைக் குறித்தும் தன் மூவேளைச் செபவுரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை நாம், வணக்கத்துடனும் நன்றியுடனும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறோம், வானுலகிலிருந்து அவர் நமக்காகவும் இவ்வுலகின் அமைதிக்காகவும் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார் என கூறினார் திருத்தந்தை.

விரைவில் புனிதராக அறிவிக்கப்படவுள்ள அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், நவீன காலத்தின் மிக உன்னதத் திருத்தந்தை எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி, வத்திக்கானில் இடம்பெற உள்ள சிறப்புத் திருப்பலியில், அருளாளர் ஆறாம் பவுல் அவர்களை புனிதராக அறிவிக்க உள்ளது திருஅவை.

1897ம் ஆண்டு இத்தாலியின் Concesio எனுமிடத்தில் பிறந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கன் பொதுச்சங்கம் நடந்துகொண்டிருந்தபோது, 1963ம் ஆண்டு திருத்தந்தையாக பொறுப்பேற்று, 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி காலமானார்.

இதே ஆகஸ்ட் ஆறாம் தேதியில்தான், 1945ம் ஆண்டு, ஜப்பானின் ஹீரோஷிமாவில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டை வீசியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2018, 15:56