தேடுதல்

70,000த்திற்கும் அதிகமான பீடப்பணியாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை 70,000த்திற்கும் அதிகமான பீடப்பணியாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை 

பீடப்பணியாளர்கள் திருத்தூதர்களாக வாழ அழைப்பு

பீடப்பணியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த திருத்தந்தை, அனைவரையும் திருத்தூதர்களாக வாழ அழைப்பு விடுத்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 31, இச்செவ்வாய் மாலை, ஆறு மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 70,000த்திற்கும் அதிகமான பீடப்பணியாளர்களுக்கு ஒரு குறுகிய உரையை வழங்கியபின்னர், அவர்களில் 5 இளையோர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார்.

அமைதியும், திருப்பலியும், இணைந்தே இருக்கும்

திருப்பலியில் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் அமைதி வாழ்த்து குறித்து கேள்வி எழுப்பிய இளையவருக்கு பதில் வழங்கியத் திருத்தந்தை, அமைதியும் திருப்பலியும் ஒன்றோடொன்று பிரிக்கமுடியாமல் இணைந்துள்ளது என்றும், திருப்பலியில் பங்கேற்பவர்கள், இந்த அமைதியை, உலகெங்கும் பரப்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

ஆழ்நிலை தியானமும் பணியும்

பீடப்பணியாளர்கள், தியானத்தையும் பணியையும் எவ்விதம் இணைக்கமுடியும் என்று ஓர் இளைஞர் கேட்டதற்கு, திருப்பலியில் உதவிகள் செய்தபின், பீடப்பணியாளர்கள் சிறிது நேரம் அமைதியில் அமர்ந்து, தங்கள் பங்கு சமுதாயத்திற்காகவும், இவ்வுலகிற்காகவும் செபிப்பது மிகச் சிறந்த பலனளிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்தார்.

நீங்களும் திருத்தூதர்கள் ஆகலாம்

கோவிலுக்குச் செல்லாத நண்பர்களைக் குறித்து கேள்வி எழுந்தபோது, அந்த நண்பர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை நல்வழியில் நடத்தும் ஆர்வம் உங்களுக்குள் எழும் என்று கூறியத் திருத்தந்தை, பொதுவாக, நண்பர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டிருந்தால், அவர்கள் நம்மிடம் இயேசுவின் சாயலைக் காண்பர் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

நம்பிக்கை சுவாசிக்கும் காற்றைப்போன்றது

நம்பிக்கையைக் குறித்து ஓர் இளைஞர் கேள்வி எழுப்பிய வேளையில், கிறிஸ்தவ நம்பிக்கை, நாம் சுவாசிக்கும் காற்றைப் போன்றது என்ற ஒப்புமையைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காற்று இல்லாதபோது வாழ்வும் இல்லாமல் போகும், அதேபோல், நம்பிக்கை இல்லாத வாழ்வும் உயிரற்றுப்போகும் என்று கூறினார்.

புனிதராவதற்கு இயேசு வகுத்துள்ள வழி

இரக்கத்தின் செயல்கள் குறித்து ஓர் இளையவர் எழுப்பிய இறுதிக் கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை, புனிதத்தில் வளர இயேசு வழங்கிய ஒரே வழி, அயலவரின் அன்பு என்பதை தெளிவுபடுத்தி, அயலவரின் தேவைகளை நிறைவேற்றும் நாம் புனிதர்களாக மாறும் வரம் பெறுகிறோம் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 15:25