ஜெனோவாவில் இடிந்து விழுந்த மொராந்தி மேம்பாலம் ஜெனோவாவில் இடிந்து விழுந்த மொராந்தி மேம்பாலம்  

துன்புறுவோரின் துயரங்கள் அன்னை மரியிடம் அர்ப்பணிப்பு

ஜெனோவா நகரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தோர், இறந்தோர் மற்றும் அவர்களின் குடும்பங்களை, சிறப்பாக நினைவுகூர்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகின் பல பகுதிகளில் உடலிலும், உள்ளத்திலும் கடுந்துயரங்களை அனுபவிப்பவர்களை, அன்னை மரியிடம் அர்ப்பணித்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மரியின் விண்ணேற்பு விழாவாகிய ஆகஸ்ட் 15, இப்புதன் நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய பின்னர், ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்காகவும் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில் துன்புறும் அனைவருக்கும், நம் விண்ணக அன்னை ஆறுதலும், துணிச்சலும், அமைதியும் தர வேண்டுமெனச் செபிப்போம் என உரைத்த திருத்தந்தை, இச்செவ்வாயன்று ஜெனோவாவில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட எல்லாரையும் இந்நேரத்தில் சிறப்பாக நினைவுகூர்கிறேன் என்று கூறினார். பின்னர் எல்லாருடனும் சேர்ந்து இவர்களுக்காக, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தை செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் துறைமுக நகரமான ஜெனோவாவில், மொராந்தி மேம்பாலம் இடிந்து விழுந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஏறக்குறைய 40 வாகனங்கள், 45 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 15:22