தேடுதல்

திருப்பயணிகளுடன் திருத்தந்தை திருப்பயணிகளுடன் திருத்தந்தை 

மறைக்கல்வியுரை : இயலாமை என்பது, ஒரு நாளும் சாபக்கேடல்ல

மாயத் தோற்றங்களிலும், சிலைகளிலும் நம்முடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புக்கள்............

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரம் அவ்வப்போது சிறு தூறல்களைக் கண்டுவந்தாலும், வெயிலின் தாக்கத்திற்கும் குறைவில்லை. நாம் கடந்த வாரம் அறிவித்ததுபோல், இந்த வாரமும் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை, வெயிலின் காரணமாக அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. இறைவன் வழங்கிய பத்துக் கட்டளைகள் குறித்து தன் புதன் மறைக்கல்வி உரைகளில் கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், சிலை வழிபாடு குறித்து உரையாற்றினார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று சிலை வழிபாடு குறித்து நோக்குவோம். கடவுளை விட்டு இஸ்ரயேல் மக்கள் விலகிச் சென்று, பொன்னால் கன்று ஒன்றைச் செய்து அதனை வழிபட்ட நிகழ்வு, பாலை நிலத்தில் இடம்பெற்றது. இந்த இடத்தில் பாலை நிலம் என்பது, முக்கியத்துவம் நிறைந்த ஒன்று, ஏனெனில், பாலை நிலம் என்பது, மனிதரின் இயலாமையையும், பலவீனத்தையும், நிலையற்றதன்மையையும் உருவகமாக குறித்துக் காட்டுகிறது. நம்முடைய பாலைவன அனுபவங்கள் தரும் அச்ச உணர்வுகளைத் தவிர்ப்பதற்காக, நாம் எத்தனை முறைகள் சிலைகளுடனும், செயற்கையான பதில்களுடனும் நமக்கு இயைந்த ஒரு மதத்தை உருவாக்கியுள்ளோம்? மின்னும் தங்க நகைகளைக் கொண்டு, பொய் தெய்வத்தை உருவாக்க ஆரோனால் மக்கள் கேட்கப்பட்டதுபோல், நாமும் மாயத் தோற்றங்களிலும், சிலைகளிலும் நம்முடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும், இயேசுவில் தன்னை வெளிப்படுத்திய இறைவன், பாலை நிலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் நம்பத்தக்க, உறுதியான வழியை நமக்கு எடுத்துரைக்கிறார்.  நம் இதயங்களின் ஆழமான ஏக்கங்களுக்கு பதிலுரை வழங்கவும், அவைகளை நிறைவு செய்யவும் இறைவன் ஒருவராலேயே இயலும். இதனை சக்தி வாய்ந்த வகையில், சிலுவையிலிருந்து நமக்குக் கற்பிக்கிறார் இயேசு. இந்தச் சிலுவையில்தான் இயேசு, ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறார். அதாவது, நம் இயலாமையை நாம் ஒருநாளும் ஒரு சாபக்கேடாக நோக்காமல், நம்முடைய பயணத்தில் நம்மை பலப்படுத்தும் வானகத்தந்தையை நேரடியாகச் சந்திக்கும் இடமாக நோக்க வேண்டும் என்று.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இம்மாதம் ஒன்பதாம் தேதி, அதாவது, இவ்வியாழனன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித எடித் ஸ்டெயினின் திருவிழா குறித்தும் எடுத்துரைத்தார். ஐரோப்பாவின் பாதுகாவலர்களுள் ஒருவரான புனித எடித் ஸ்டெய்ன் அவர்கள், ஐரோப்பாவை பாதுகாப்பாராக என்ற ஆவலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 15:26