Cerca

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரை 150818 திருத்தந்தையின் மூவேளை செப உரை 150818  (ANSA)

மூவேளை செப உரை – மரியின் விண்ணேற்பு தரும் உறுதிப்பாடு

இறைச் சேவையில் மகிழ்ந்து, நம் சகோதரர் சகோதரிகளுக்கான சேவையில் அதை வெளிப்படுத்துவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆகஸ்ட் 15, இப்புதன், அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவும், இந்திய சுதந்திர தினமும் ஆகும். இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவிற்கு விடுமுறை என்றால், அன்னைமரியாவின் விண்ணேற்பு விழாவையொட்டி, இத்தாலி முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது. இந்த விடுமுறை நாளில் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை இடம்பெறவில்லை, மாறாக, பெருவிழாவிற்குரிய நண்பகல் மூவேளை செப உரையை மக்களுக்கு வழங்கி, அவர்களோடு இணைந்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மரியாவின் விண்ணேற்பு விழாவான இன்று விசுவாசிகள், அன்னை மரிக்கு தங்கள் வணக்கத்தை சிறப்பான விதத்தில் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்துகின்றனர். பொது திருவழிபாட்டு நிகழ்வுகளிலும், பல ஆயிரக்கணக்கான பக்தி முயற்சிகளிலும்கூட இதை நாம் காண்கிறோம். இங்கு அன்னை மரியா தன்னைப் பற்றி முன்னுரைத்த, 'எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்' (லூக்.1:48) என்ற வரிகள் நிறைவுறுவதைக் காண்கிறோம். ஏனெனில், தாழ்நிலையில் உள்ளோரை ஆண்டவர் உயர்த்தியுள்ளார். உடலோடும் ஆன்மாவோடும் அன்னை மரியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது, இயேசுவோடு தனிப்பட்ட ஒன்றிப்பில் வாழ்ந்த இறைவனின் தாயாம் அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்ட தெய்வீக சிறப்புச் சலுகையாகும். அன்னை மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்டதிலிருந்து வளர்ந்த இந்த ஒன்றிப்பு, தன் மகனின் மறையுண்மையில் பங்கு பெற்றதன் வழியாக முதிர்ச்சியடைந்தது. அன்னை மரியாவின் வாழ்வு, அக்காலத்தின் சாதாரண பெண்களின் வாழ்வு போன்றே தோற்றமளித்தது. அவர் செபித்தார், குடும்பத்தையும் வீட்டையும் வழிநடத்திச் சென்றார், செபக்கூடத்திற்குச் சென்றார். ஆனால், அவரின் அனைத்து நடவடிக்கைகளும், இயேசுவுடன் ஒன்றித்திருப்பதில் இடம் பெற்றன. கல்வாரியில் இது தன் உச்சத்தை எட்டியது. இதனாலேயே இறைவன், அன்னை மரியாவுக்கு, இயேசுவின் உயிர்ப்பில் முழு பங்கை அளித்தார். இறைமகனைப் போல், அன்னை மரியாவின் உடலும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. இதையே இன்றைய திருப்பலியின் முன்னுரையும் எடுத்துரைக்கிறது.

கடவுள் மனிதரை ஆன்மாவோடும் உடலோடும் மீட்க வேண்டும் என ஆவல் கொள்ளும் மறையுண்மை குறித்து ஆழமாகத் தியானிக்க இன்று திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. அன்னை மரியாவின் விண்ணேற்பு நமக்கு நம் இறுதி நோக்கு குறித்த உறுதிப்பாட்டை வழங்குகிறது. நம் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிழ்வில் பங்கு பெறுவோம் என்ற கிறிஸ்தவ வெளிப்பாடு, நம் விசுவாசத்தின் மூலைக்கல் ஆகும்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு, நம்  விண்ணக வாழ்வு பற்றி மட்டுமல்ல, நாம் நம் உடலோடும் ஆன்மாவோடும் இறைவனுக்குச் சேவையாற்றி மகிமைப்படுத்த வேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டி நிற்கிறது. இறைவனுக்குச் சேவை புரிவதில் மகிழ்ந்து, அதனை நம் சகோதரர், சகோதரிகளுக்கான தாராள மனதுடைய சேவையிலும் நாம் வெளிப்படுத்துவதன் வழியாக, உயிர்ப்பு நாளின்போது நாமும் நம் வானக அன்னையைப் போல் இருப்போம். இதன் வழியாக, 'உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்' (1 கொரி. 6:20) என்ற தூய பவுலின் வார்த்தைகளை முற்றிலுமாக ஏற்று நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறுவோம், மற்றும், வானுலகில் முடிவின்றி இறைவனைப் புகழ்ந்து பாடுவோம். விண்ணுலகில்  அனைத்துப் புனிதர்களோடும், நம் அன்புக்குரியவர்களோடும்  இணைந்திருக்கும் நாளை நோக்கிய நம் ஒவ்வொரு நாள் பயணத்தில், நம் வாழ்வில் உதவ வேண்டும் என அன்னை மரியின் பரிந்துரையை வேண்டுவோம்.

இவ்வாறு, தன் மூவேளை செப உரையை, புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையின் இறுதியில், இவ்வுலகில் உடலிலும், உள்ளத்திலும் துன்புறும் அனைவரையும் நினைவுகூர்ந்து செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

15 August 2018, 15:34