இத்தாலிய இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் 

கனவுகளின்றி வருங்கால வாழ்வில்லை

வருங்காலம் குறித்த கனவுகளும், வாழ்வு சாட்சியங்களும் இன்றி, திருஅவை முன்னோக்கிச் செல்ல முடியாது. - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இத்தாலிய மறைமாவட்டங்களின் இளையோருக்கென இத்தாலிய ஆயர் பேரவையால் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்குபெற்றோருடன் இச்சனிக்கிழமை இரவு செபவழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்கால கனவுகளை செயல்படுத்துவதில் இளையோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

உரோம் நகரின் சிர்கோ மாஸ்ஸிமோ திடலில் குழுமியிருந்த 70,000த்திற்கும் அதிகமான இத்தாலிய இளையோருக்கு உரையாற்றிய திருத்தந்தை, அவர்களுள் நான்கு பேர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்.

அக்டோபரில் வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் இளையோர் குறித்த உலக ஆயர்கள் மாநாட்டிற்கும், சனவரியில் பானமாவில் இடம்பெறவுள்ள உலக இளையோர் நாள்  கொண்டாட்டங்களுக்கும் தயாரிப்பாக, ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த இத்தாலிய இளையோர் கூட்டத்தில் கலந்து கொண்டோருடன் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனவுகளை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம், ஏனெனில் அவை வருங்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றியமையாதவை என்றும், அந்த கனவுகள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வியை கேட்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

விவிலியத்தில் கூறப்பட்டுள்ள கனவுகள், அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளதால் அவை மிக உயரிய இடத்தைப் பெறுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, அவைகளையொத்ததாக நம் கனவுகளும் இருக்கவேண்டும் என கூறினார்.

உயரிய கனவுகள் என்பவை, மற்றவர்களோடு பகிர்வதையும், புதிய வாழ்வை உருவாக்குவதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனவு காணும் சுதந்திரம் நம்மிடமிருந்து பறிக்கப்படும்போது, நாம் முன்னோக்கிச் செல்வது தடைபடுவதுடன், நம்மிலும் பிறரிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அன்பும் குறைபடுகிறது என்றார்.

‘விசுவாசமும், திருஅவைக்குள் வாழ்வின் அர்த்தத்தைத் தேடுதலும்’ என்பது குறித்து ஓர் இளைஞர் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, வார்த்தைகளால் அல்ல மாறாக வாழ்க்கை நடவடிக்கைகளால் நம் விசுவாசத்திற்கு சாட்சியாக விளங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

சாட்சிய வாழ்வு இல்லாத திருஅவை, வெறும் புகைக்கு ஒப்பாகும் என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2018, 20:30