தேடுதல்

திருத்தந்தை இளையோர் சந்திப்பு திருத்தந்தை இளையோர் சந்திப்பு 

தீமைகளுக்கு எதிரான மௌனம், அதற்கு உரமாகிறது

தீமைகள் ஆற்றாமல் இருப்பது நல்லது, ஆனால், நன்மைகளையும் ஆற்றாமல் இருப்பது தீயது என்கிறார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உண்மை கிறிஸ்தவராக இருப்பது என்பது, தீமையை ஆற்றாமல் இருப்பது மட்டுமல்ல, மாறாக, நன்மையை ஆற்றும் அதேவேளை, தீமையை உயிரோட்டமாக எதிர்ப்பதும் ஆகும் என கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஏறத்தாழ 70,000 இளைஞர்களுடனும், ஏனைய திருப்பயணிகளுடனும்  இணைந்து மூவேளை செபத்தை செபித்து, உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளை ஆற்றாமல் இருந்தால் மட்டும் போதாது, நன்மைகளின் பக்கம் நின்று நன்மைகளை ஆற்றுபவர்களாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஞாயிறு திருப்பலி வாசகத்தில் வந்த புனித பவுலின் வார்த்தைகளான, 'கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள்' என்பதை எடுத்துரைத்து, தீமைகளை மறுதலித்து நன்மைகளை ஆற்றுவதற்கு நம் திருமுழுக்கின்போது வழங்கிய வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம் என்றார்.

நான் எவருக்கும் தீங்கிழைப்பதில்லை என பலவேளைகளில் மக்கள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அது சிறந்த வாழ்க்கை முறையே, ஆனால் அதேவேளை, நாம் நன்மையை ஆற்றுகிறோமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும், எனவும் கூறினார் திருத்தந்தை.

தீமையைச் செய்யாமலும், அதேவேளை, எந்த நன்மைகளையும் ஆற்றாமலும் வாழும் மக்கள், தங்கள் வாழ்வை, அக்கறையற்ற நிலையிலும், அனுதாபத்துக்குரிய நிலையிலும் வாழ்கின்றனர் என்ற திருத்தந்தை, இவ்வாறு நன்மைகளின் செயல்பாடின்றி வாழ்வது, நற்செய்தி படிப்பினைகளுக்கும், இளைஞர்களின் இயல்புக்கும் எதிரானது என்று கூறினார்.

தீமைகள் ஆற்றாமல் இருப்பது நல்லது, அதேவேளை, நல்லவற்றை ஆற்றாமல் இருப்பது தீயது, எனவும் இளையோருக்கு எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் என்பவர்கள், எவரையும் பகைக்காமல் இருந்து மன்னிக்கவும், பகை உணர்வுகளை மனதிற்குள் வளர்க்காமல் எதிரிகளுக்காக செபிக்கவும், பிரிவினைகளுக்கு காரணமாகாமல் அமைதியைக் கொணரவும் உழைக்க வேண்டியவர்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, பிறரைப் பற்றி மற்றவர் அவதூறாகப் பேசும்போது அங்கு தலையிட்டு தடுக்கவும், மற்றவர்களைப் பற்றி அவதூறாகப் பேசாமல் இருக்கவும் வேண்டியவர்கள் நாம், என மேலும் உரைத்தார்.

தீமைகளை நன்மைகளால் எதிர்க்கும் வீரமான கிறிஸ்தவர்கள் இல்லாதபோது, தீமைகள் வளர்கின்றன, ஏனெனில் நமது மௌனம் வழியாக நாம் அதற்கு உரமளிக்கிறோம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2018, 14:30