புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 290818 புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 290818 

மெத்தடிஸ்ட், வால்தெனேசியன் சபைகளுக்கு திருத்தந்தை செய்தி

கிறிஸ்தவ சபைகளில் நிலவும் நம்பிக்கையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளும் வளர்ந்துள்ளது குறித்து இறைவனுக்கு நன்றி - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் தொர்ரே பெல்லிச்சே (Torre Pellice) எனுமிடத்தில், மெத்தடிஸ்ட் மற்றும் வால்தெனேசியன் சபைகளின் உயர்மட்டக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 26 இஞ்ஞாயிறன்று துவங்கி, 31 இவ்வெள்ளி முடிய நடைபெறும் இக்கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தியை, வால்தெனேசிய சபையின் ஒருங்கிணைப்பாளர், யுஜெனியோ பெர்னார்தினி அவர்கள் இக்கூட்டத்தின் முதல் அமர்வில் வாசித்தார்.

கிறிஸ்தவ சபைகளில் நிலவும் நம்பிக்கையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளும் அண்மைய காலத்தில் வளர்ந்துள்ளது குறித்து தான் இறைவனுக்கு நன்றி கூறுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்று, இறுதி இரவுணவில், இயேசு செபித்த சொற்கள், நமக்குள் மென்மேலும் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில், நம்மால் நற்செய்தியை இன்னும் முழுமையாக அறிவிக்கமுடியும் என்று, திருத்தந்தை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவ சபைகளின் கதவுகளைத் தட்டும் பல இலாசர்களுக்கு நாம் பணியாற்றுவதால் நம் நம்பகத்தன்மை இவ்வுலகில் பறைசாற்றப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

மெத்தடிஸ்ட் மற்றும் வால்தெனேசியன் சபைகளின் 180வது ஆண்டுக்கூட்டத்தில், புலம்பெயர்ந்தோரை வரவேற்றல், போதிப்பதற்கும் பணியாற்றுவதற்கும் இடையே உள்ள தொடர்பு, பொதுவாழ்வில் கிறிஸ்தவ பிரசன்னம் ஆகிய கருத்துக்களில் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2018, 15:28