தேடுதல்

Vatican News
உரோம் பேதுரு சதுக்கத்தில் செப வழிபாடு உரோம் பேதுரு சதுக்கத்தில் செப வழிபாடு  (ANSA)

புனிதர்கள் சுவக்கீன், அன்னா திருநாளுக்கு திருத்தந்தை டுவிட்டர்

முதியோருக்கு குடும்பங்கள் வழங்கவேண்டிய மதிப்பைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் 

ஜூலை 26 இவ்வியாழனன்று, அன்னை மரியாவின் பெற்றோர்களான புனிதர்கள் சுவக்கீன், அன்னா ஆகியோரின் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, தாத்தா, பாட்டி ஆகியோரை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"குடும்பத்தில் தாத்தாவும், பாட்டியும் கருவூலங்கள். தயவுசெய்து அவர்களை பராமரியுங்கள், அவர்கள் மீது அன்புக்கொள்ளுங்கள், அவர்களை உங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு அனுமதியுங்கள்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

முதியோரைக் குறித்து திருத்தந்தையின் சில கருத்துக்கள்

2017ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 81வது பிறந்தநாளை, நோயுற்ற ஒரு சில குழந்தைகளுடன் கொண்டாடியபோது, குடும்பங்களில், குழந்தைகள், தங்கள் தாத்தா பாட்டியுடனும், முதியோருடனும், கடவுளுடனும் பேசுவது முக்கியம் என்பதைக் கூறியிருந்தார்.

அதேபோல், 2015ம் ஆண்டு அவர் வழங்கி வந்த புதன் மறைக்கல்வி உரைகளில், மார்ச் 4 மற்றும் 11 ஆகிய இரு புதன் கிழமைகளில், தொடர்ந்து, முதியோருக்கு குடும்பங்கள் வழங்கவேண்டிய முக்கியமான மதிப்பைக் குறித்து இரு உரைகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதியோரைக் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

"ஒரு சமுதாயம், தன் முதியோருக்கு எத்தகைய இடத்தை வழங்கியுள்ளது என்பதே, அச்சமுதாயம் கலாச்சாரத்தில் எவ்வளவு தரம் மிக்கதாக உள்ளது என்பதை அளக்கும் அளவுகோலாக விளங்குகிறது" என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறிய கூற்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

26 July 2018, 11:39