தேடுதல்

சாம்பல் புதனன்று வத்திக்கான் பசிலிக்காவுக்குச் செல்லும் கர்தினால் Tauran சாம்பல் புதனன்று வத்திக்கான் பசிலிக்காவுக்குச் செல்லும் கர்தினால் Tauran 

பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran மரணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, அந்த நிகழ்வை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் நடுமாடத்திலிருந்து உலகுக்கு அறிவித்தவர், கர்தினால் Tauran

மேரி டிரிசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,06,2018. திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால், Jean-Louis Tauran அவர்கள் காலமானதையொட்டி, தனது ஆழ்ந்த இரங்கலையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, கர்தினால் Tauran அவர்களின் சகோதரி Geneviève DUBERT அவர்களுக்கு அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை அனுப்பியுள்ள அச்செய்தியில், திருப்பீட தூதரகப் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள், குறிப்பாக, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலராக மிகத் திறமையுடன் ஆற்றியது போன்றவற்றைப் பாராட்டியுள்ளார்,திருத்தந்தை. கர்தினால் அவர்கள், முஸ்லிம் உலகோடு ஏற்படுத்தியுள்ள நம்பகத்தன்மை பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர் சிறந்த ஆலோசகராகவும் இருந்தார் என்றார். திருஅவை மீது அவர் மிகுந்த அன்பு கொண்டு ஆற்றிய சேவையினால், அவரை திருஅவையின் Camerlingue ஆக தான் நியமித்திருந்ததையும் தந்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut நகரில் பார்க்கின்சன் நோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்த கர்தினால் Tauran அவர்கள், சிகிச்சை பலனின்றி, தனது 75 வயது வயதில் உயிர் துறந்தார்.

பிரான்ஸ் நாட்டின் போர்து நகரில் 1943ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்த கர்தினால் Tauran அவர்கள், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1975ம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருப்பீடத்தின் தூதரகப் பணியைத் தொடங்கிய அவர், 1979ம் ஆண்டுவரை, தொமினிக்கன் குடியரசில் திருப்பீட தூதராகப் பணியாற்றினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் 2003ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்ட, கர்தினால் Tauran அவர்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2007ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவராக நியமித்தார். 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்தினால் Tauran அவர்களின் இறப்புடன், திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 225 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 124 ஆகவும் மாறியுள்ளன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2018, 16:11