தேடுதல்

செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நிக்கராகுவாவிற்கு திருத்தந்தை தொடர்ந்து செபம்

இறைவனிடம் நாம் மன்றாடுவது, உடனடியாக கேட்கப்படாவிட்டாலும், விரைவில் நிச்சயம் அதற்குப் பலன் கிடைக்கும் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செபம், ஒருபோதும் வீணாவதில்லை என்றும், அது, எப்போதும் ஏதாவது புதியதைக் கொணரும் என்றும், அது, விரைவில் அல்லது பின்னர் பலனை அளிக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 24, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், நிக்கராகுவா நாட்டில் ஒப்புரவை ஏற்படுத்த கலந்துரையாடலே ஒரே வழியென அந்நாட்டு ஆயர்கள், ஜூலை 23, இத்திங்களன்று தீர்மானித்துள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அன்புக்குரிய அந்நாட்டிற்காகத் தொடர்ந்து செபிப்பதாக உறுதியளித்துள்ளார்.

நிக்கராகுவாவில் இடம்பெற்றுவரும் பதட்டநிலைகளுக்கு மத்தியில், தலத்திருஅவையின் இடைநிலைப் பணியுடன் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கலந்துரையாடலில், தொடர்ந்து செயல்படுவது குறித்து இத்திங்களன்று கூட்டம் நடத்திய ஆயர்கள், அப்பணியைத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் தேசிய கலந்துரையாடல் வெகு விரைவில் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள நிக்கராகுவா ஆயர்கள், துன்புறும் மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் உடனிருக்கும் என்றும் உறுதி கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2018, 15:54