மூவேளை செப உரை 150718 மூவேளை செப உரை 150718 

நற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய கிறிஸ்தவரின் கடமை

கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, ஏழ்மையின் எடுத்துக்காட்டுடன், இயேசுவின் அன்பில் நம்பிக்கைக் கொண்டவர்களாக நற்செய்தியை அறிவிக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருமுழுக்குப்பெற்ற அனைவரும் இயேசுவை தங்கள் மையமாகக் கொண்டு, நற்செய்தி அறிவிப்புப் பணியை ஏற்று நடத்த கடமைப் பெற்றுள்ளார்கள் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்து தம் சீடரை இருவர் இருவராக நற்செய்தி அனுப்ப அனுப்பியதைப் பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஏறத்தாழ 20,000 திருப்பயணிகளுடன் தன் கருத்துக்களை ஞாயிறு மூவேளை செப உரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை மையமாகக் கொண்டு, நற்செய்தி அறிவிப்புப்பணியை ஆற்ற அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி அனுப்பிய இயேசு, இவர்கள் தன் உயிர்ப்பிற்கு பின் தூய ஆவியின் வல்லமையுடன் ஆற்றவேண்டிய செயல்களின் முன்னோடியாக இதனைச் செய்தார் என்றார்.

நற்செய்தி அறிவிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பது, தனியார் அல்லது ஒரு குழுவின் முயற்சியோ அல்ல, மாறாக, கிறிஸ்துவோடு என்றும் பிரிக்கமுடியாத வகையில் இணைந்திருக்கும் திருஅவையின் பணியாகும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது, திருஅவையில் உள்ள அருள்பணியாளர்களுக்கு மட்டும் விடப்பட்ட அழைப்பு அல்ல, மாறாக, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

கைத்தடியும் காலணியும் தவிர வேறு எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என இயேசு கூறுவது, அவரது அன்பின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையின் பலத்தைக் குறிக்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழ்மையின் பலத்துடன் நற்செய்தியை அறிவிக்க முடியும் என்பதை இந்த உரோம் நகரில் வாழ்ந்த எத்தனையோ புனிதர்கள் நிரூபித்துச் சென்றுள்ளனர் எனபதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2018, 13:02