பாத்திமாவில் பவனி பாத்திமாவில் பவனி 

“நமதன்னையின் அணிகள்” கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

பாத்திமாவில், கிறிஸ்தவத் தம்பதியர்க்கென நடத்தப்பட்ட பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை செய்தி அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருஅவை, உண்மையைக் கூறவேண்டியிருப்பதால், பாவத்தைக் கண்டிக்கிறது, அதேநேரம், பாவி என தன்னை ஏற்பவரை அரவணைத்துக்கொள்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணமான கிறிஸ்தவத் தம்பதியர் பங்குபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பினார்.

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் “நமதன்னையின் அணிகள்” எனப்படும், ஒரு பொதுநிலை இயக்கத்தினர் நடத்திய கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, தந்தையிடம் திரும்பிவந்த காணாமல்போன மகனின் செயலை மையப்படுத்தி இக்கருத்தரங்கு நடைபெற்றதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போய், பின்னர் திரும்பிவந்த மகனை அணைப்பதில் ஒருபோதும் தளராமல் இருந்த, மற்றும் தன் அன்பை மீண்டும் உறுதி செய்த தந்தை போன்று, திருஅவை பாவிகளிடம் நடந்துகொண்டு, இறைவனின் இரக்கத்தை வழங்குகின்றது என்று, தன் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 16, இத்திங்களன்று தொடங்கிய “நமதன்னையின் அணிகளின்” 12வது பன்னாட்டு கருத்தரங்கு, ஜூலை 21, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

“நமதன்னையின் அணிகள்” இயக்கம், திருமணமான தம்பதியரின் ஆன்மீகத்தை மையப்படுத்தி, 1938ம் ஆண்டில், சில தம்பதியர் மற்றும், அருள்பணி Henry Caffarel அவர்களால் பிரான்ஸ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு டிசம்பரில் புத்துயிர் பெற்ற இந்த இயக்கத்தில், தற்போது ஐந்து கண்டங்களில், 95 நாடுகளைச் சேர்ந்த 13,500க்கும் மேற்பட்ட அணிகள் உள்ளன. திருமணம் எனும் அருளடையாளத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், இன்றைய சமுதாயத்தில் தம்பதியரையும், குடும்பங்களையும் ஒன்றிணைக்கவுமென, இந்த அணிகள் ஒவ்வொரு மாதமும் கூடுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 15:46