திருத்தந்தையின் மூவேளை செப உரை திருத்தந்தையின் மூவேளை செப உரை 

மனக்குரலுக்கு அழைப்பு விடுக்கும் புதுமை

மனிதர்களை வியாபாரப் பொருட்களாக நடத்தும் மனநிலைகளை எதிர்த்துப் போராட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்கிறார், திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகில் எண்ணற்ற நம் சகோதரர், சகோதரிகள், பல்வேறு விதமான பசிகளால் வாடும்போது, நாம் பாராமுகமாகவோ, வெறும் பார்வையாளர்களாகவோ செயல்பட முடியாது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்த தன் கருத்துக்களை, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுடன் நண்பகல் மூவேளை செப உரையில் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, அப்பத்தை பலுகச்செய்த புதுமையில், தன்னிடமிருந்த 5 அப்பங்களையும், 2 மீன்களையும், பிறருடன் பகிர்ந்து கொள்ள முன் வந்த சிறுவனின் மனநிலையை நாம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தன்னிடமிருந்த உணவை பிறருக்காக இயேசுவிடம் வழங்க முன்வந்த இப்புதுமையின் சிறுவன், இன்றைய இளைய தலைமுறையின் எடுத்துக்காட்டாக உள்ளான் என்று கூறியத் திருத்தந்தை, இளைய தலைமுறையினர் எப்போதும் துணிச்சலுடன் செயலாற்றுபவர்களாக உள்ளனர், அத்தகைய துணிச்சலுடன் அவர்கள் தொடர்ந்து செயல்பட உதவ வேண்டியது நம் கடமை எனவும் கூறினார்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அக்கறைக் கொண்டிருந்த இயேசு, அத்தேவைகளை நிறைவேற்றுவதில் தன் சீடர்களையும் ஈடுபடுத்தியதை இன்றையை நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைத் தேடி வந்த மக்கள் கூட்டத்திற்கு உணவை வழங்குவதோடு இயேசு நின்றுவிடவில்லை, அவருடைய வார்த்தையையும், ஆறுதலையும், மீட்பையும், இறுதியாக அவரின் உயிரையுமே கையளித்தார் என்றார்.

இயேசுவின் சீடர்களாகிய நாம், மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அக்கறையை வெளிப்படுத்தும்போதுதான், நாம் பெரிய விடயங்கள் குறித்துப் பேசும்போதும் அவர்கள் செவிமடுப்பார்கள் என்றார் திருத்தந்தை.

உணவிற்காகவும், விடுதலைக்காகவும், நீதிக்காகவும், அமைதிக்காகவும், அனைத்திற்கும் மேலாக இறை அருளுக்காகவும், பசிதாகம் கொண்டிருக்கும் மனித குலத்தின்மீது கடவுள் அன்புகூர்ந்து அவர்களின் தேவையை எப்போதும் நிறைவேற்றுகிறார், அத்தகைய பணியில் புதுமையின் சிறுவனைப்போல் நம்முடைய ஒத்துழைப்பும் அக்கறையும் தேவைப்படுகின்றது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2018, 13:46