மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவனின் கொடைகளைப் பெற்று, பிறருக்கு கொடையாகுங்கள்

இயேசுவின் காயங்கள் வழியாக மட்டுமே நாம் அவர் இதயத்தை அடைய முடியும் என்பதால், உலகில் ஓரம் தள்ளப்பட்டிருக்கும் மக்கள் வழியாக இயேசுவின் காயங்களை அணுகுவோம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ வாழ்வு குழுமம் என்ற அமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி அர்ஜென்டீனா நாட்டில் இடம்பெறும் உலக அவைக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக கிறிஸ்தவ வாழ்வு குழுமத்தின் தலவர் Mauricio LOPEZ OROPEZA அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், கடந்த பல ஆண்டுகளில் இறைவனிடமிருந்து பெற்ற கொடைகளின் துணையோடு நடைபோட்டு, திரு அவைக்கும் உலகிற்கும் கொடையாக இக்குழு திகழவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன்,  நம் சுயநலத் தேவைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்றவர்களின் தேவையை நிறைவுச் செய்ய முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதை நம் ஒவ்வொருவரிடமிருந்தும் இறைவன் எதிர்பார்க்கிறார் எனவும் அதில் கூறியுள்ளார்.

இறைவனின் இதயத்திற்குள் நுழைய விரும்புவோர், அவரின் காயங்கள் வழியாகவே அதனை நிறைவேற்ற முடியும், ஆனால் அதேவேளை, காயமுற்ற இயேசு, ஏழைகளிலும், பசியாய் இருப்போரிடமும், கல்வியறிவற்றோரிடமும், முதியோர், நோயாளிகள், சிறைப்படுத்தப்பட்டோர் ஆகியவர்களிலும் இருக்கிறார் எனவும் கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து நம்முள் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது, அதாவது, 'நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன், என்ன செய்ய வேண்டும்?' என்பதே அக்கேள்வி என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2018, 16:46