jeju தீவில் புலம்பெயர்ந்தவர்கள் jeju தீவில் புலம்பெயர்ந்தவர்கள் 

ஏமன் புலம்பெயர்ந்த மக்களுக்கு திருத்தந்தை நிதியுதவி

Jeju தீவில் ஆதரவற்றநிலையிலுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிதியுதவி அனுப்பியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் Jeju தீவில் துன்புறும் 500க்கும் மேற்பட்ட ஏமன் நாட்டு புலம்பெயர்ந்த மக்களுக்கென, தென் கொரிய திருப்பீடத் தூதர் பேராயர் Alfred Xuereb அவர்களுக்கு,  பத்தாயிரம் யூரோக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Jeju தீவு சென்று, அங்குள்ள புலம்பெயர்ந்த மக்களுடன் திருப்பலி நிறைவேற்றி,  திருத்தந்தை அனுப்பியுள்ள நிதியுதவியை, Jeju ஆயர் Peter Kang U-il அவர்களிடம் அளித்ததுடன், அம்மக்களுடன் மதிய உணவருந்தி, அவர்களுடன் திருத்தந்தை கொண்டுள்ள ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார், பேராயர் Xuereb. அம்மக்களுக்காகத் திருத்தந்தை தொடர்ந்து செபிப்பதையும் தெரிவித்தார், பேராயர் Xuereb.  

சுற்றுலா செல்லும் பயணிகள் 90 நாள்கள் வரை அரசின் தங்கும் அனுமதியின்றி அத்தீவில் இருக்கலாம் என்ற நிலை இருந்ததால், ஏமனில் 2015ம் ஆண்டில் உள்நாட்டுக் கலவரம் தொடங்கியபின், நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள், முதலில் Jeju தீவுக்குச் சென்றனர் என்று தலத்திருஅவை கூறியுள்ளது.

புலம்பெயரும் மக்கள், Jeju தீவுக்குப் பெருமளவில் செல்லத் தொடங்கியதையொட்டி, தென் கொரியாவுக்குள் அவர்கள் நுழைவதை அரசு கட்டுப்படுத்தியுள்ளது, அதேநேரம், அத்தீவில் தங்கியுள்ள ஏமன் மக்களுக்குத் தலத்திருஅவை உதவி வருகின்றது என செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2018, 15:09