தேடுதல்

Vatican News
கிரேக்க நாட்டில் காட்டுத் தீ பேரிடர் கிரேக்க நாட்டில் காட்டுத் தீ பேரிடர்  (AFP or licensors)

திருத்தந்தை - பேரிடர் மீட்புப்பணிகளை ஆற்றுவோர்க்கு ஊக்கம்

கிரீஸ், லாவோசில் இயற்கைப் பேரிடர்களில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகத் திருத்தந்தை செபம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

லாவோஸ் நாட்டின் தென்கிழக்கில், மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் நீர்த்தேக்கம் உடைந்ததையொட்டி ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றோருக்கு, தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பேரிடரில் காணாமல்போயுள்ளவர்களைத் தேடுவதிலும், காயமுற்றோருக்கு உதவுவதிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குத் திருத்தந்தை, தன் செபங்களையும், ஆதரவையும் தெரவித்துள்ளார்.

மேலும், கிரேக்க நாட்டில் அண்மையில் இடம்பெற்ற காட்டுத் தீ பேரிடர் அறிந்து தான் மிகவும் வருந்துவதாகவும், இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட எல்லாருடனும் ஒருமைப்பாட்டுண்ர்வு கொள்வதாகவும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும், தொடர்ந்து மீட்புப்பணியாற்றுவோருக்கு தனது ஊக்கத்தையும் தெரவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், லாவோஸ் மற்றும் கிரேக்க நாடுகளின் திருஅவைகள் மற்றும் அரசுகளின் அதிகாரிகளுக்கு, திருத்தந்தையின் பெயரில், அனுப்பியுள்ள தந்திச் செய்திகளில், திருத்தந்தையின் செபங்களும், ஆறுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

லாவோசில் 1.6 கிலோ மீட்டர் அகலமும், 770 மீட்டர் நீளமும், 16 மீட்டர் உயரமும் உடைய "Saddle Dam D" நீர்த்தேக்கம் உடைந்ததில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர் மற்றும் 6,600க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 60 பேர் இறந்துள்ளனர்.

24 July 2018, 15:15