திருச்சி ஆயர் டிவோட்டா அவர்கள் அருங்கொடை இல்லத்தை ஆசிர்வதிக்கிறார் திருச்சி ஆயர் டிவோட்டா அவர்கள் அருங்கொடை இல்லத்தை ஆசிர்வதிக்கிறார் 

திருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு

இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 12ம் நாளன்று திருச்சி மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2001ம் ஆண்டு சனவரி 28ம் நாளன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் ஆன்டனி டிவோட்டா

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,14,2018. இந்தியாவின் திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்களின் பணி ஓய்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

1943ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, சென்னை சாந்தோமில் பிறந்த ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள், 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதியன்று, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்திற்கென அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருச்சி மறைமாவட்ட ஆயராகப் பணியை ஏற்பதற்குமுன்னர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமைக் குருவாகவும் பணியாற்றியிருக்கின்றார், ஆயர் ஆன்டனி டிவோட்டா.

1606ம் ஆண்டில், கொச்சின் மறைமாவட்டத்திலிருந்து, மதுரை மறைப்பணித்தளமாக மாறிய திருச்சி மறைமாவட்டம், 1886ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி மதுரை மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. பின், 1887ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி திருச்சினாப்பள்ளி மறைமாவட்டமாகப் பெயரிடப்பட்டு, 1950ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, திருச்சிராப்பள்ளி மறைமாவட்டமாகப் பெயர் மாற்றப்பட்டது.       

மேலும், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, தலைவர் பிரதிநிதிகளாக, ஈராக் கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ, மடகாஸ்கர் கர்தினால் Désiré TSARAHAZANA, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ, பாப்புவா நியு கினி கர்தினால் John RIBAT ஆகியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2018, 15:03