திருத்தந்தை 6ம் பால் திருப்பலி நிறைவேற்றியபோது... திருத்தந்தை 6ம் பால் திருப்பலி நிறைவேற்றியபோது... 

'மனித வாழ்வு' என்ற திருமடல் வெளியானதன் பொன்விழா

'Humanae Vitae' திருமடல் வெளியான பொன்விழாவையொட்டி, உலகின் பல்வேறு ஆயர் பேரவைகள் தங்கள் பாராட்டுக்களையும், நன்றி உணர்வுகளையும் வெளியிட்டுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,25,2018. 50 ஆண்டுகளுக்கு முன், 1968ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி திருத்தந்தை அருளாளர் 6ம் பால் அவர்களால் கையொப்பமிடப்பட்டு, அவ்வாண்டு, ஜூலை 29ம் தேதி வெளியிடப்பட்ட 'Humanae Vitae' அதாவது, 'மனித வாழ்வு' என்ற திருமடலைப் பற்றிய கட்டுரையொன்று, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இத்திருமடல் வெளியான வேளையில், மனித வாழ்வின் மேன்மையை வலியுறுத்தி திருத்தந்தை 6ம் பால் அவர்கள் துணிவுடன் வெளியிட்டிருந்த கருத்துக்கள், சக்திமிகுந்த விவாதங்களை உருவாக்கின என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

1960களில் நிலவிய பாலினப் புரட்சி, மற்றும், கருகலைத்தலை ஆதரித்து வளர்ந்துவந்த எண்ணங்கள் ஆகியவற்றிற்கு சவால்கள் விடும் வண்ணம், திருத்தந்தை 6ம் பால் அவர்கள், மனித உயிரின் மேன்மையை, இத்திருமடல் வழியே நிலைநாட்டினார் என்று இக்கட்டுரை கூறுகிறது.

மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்துடன், கருகலைத்தலையும், குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களையும் அமல்படுத்திய பல உலக அரசுகள், இன்று தங்கள் முயற்சிகளிலிருந்து விலகி, மாற்று வழிகளைக் கூறிவருவதைக் காணும்போது, 'மனித வாழ்வு' என்ற திருமடல், 50 ஆண்டுகளுக்கு முன் கூறிய பல உண்மைகள் உறுதியாகியுள்ளன என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2018, 15:26