தேடுதல்

பாரி புனித நிக்கொலாஸ் பேராலயத்திற்குமுன்பாக திருத்தந்தை உரையாற்றுகிறார் பாரி புனித நிக்கொலாஸ் பேராலயத்திற்குமுன்பாக திருத்தந்தை உரையாற்றுகிறார் 

பாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை

அருள்நிறைந்த இந்தப் பகிர்வுத் தருணத்திற்கு நன்றி கூறுகிறேன். நாம் இங்கு கூடிவந்திருப்பது, அமைதியின் இளவரசராம் இயேசுவுக்கு நாம் வழங்கும் ஒரு சாட்சியம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தியின் சக்தி, சிலுவையிலிருந்து...

இயேசுவின் நற்செய்தி மத்தியக்கிழக்குப் பகுதியிலிருந்து வந்தது. இவ்வுலக சக்திகளைவிட, சிலுவையின் சக்தியுடன் அது பிணைக்கப்பட்டதால், இத்தனை நூற்றாண்டுகளாக மனிதர்களின் உள்ளங்களை தன்பால் ஈர்த்து வந்துள்ளது. இறைவன் வகுத்துள்ள திட்டங்களின்படி நாம் மனமாற்றம் அடைவதற்கு, நற்செய்தி நம்மை நாள்தோறும் அழைக்கிறது. புனித பூமிக்கும், எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள திருத்தலங்களுக்கும் நாம் செல்லும்போது, நம் நம்பிக்கை இன்னும் ஆழப்படுகிறது.

உண்மை அமைதி நிலவ வழிகள்

நாம்  எழுப்பியுள்ள மதில் சுவர்களும், வெளிப்படுத்தும் அதிகார அடையாளங்களும் அமைதிக்கு நம்மை அழைத்துச் செல்லாது. திறந்த, நல்ல உள்ளத்துடன் நாம் மேற்கொள்ளும் உரையாடலே நம்மை அமைதிக்கு அழைத்துச் செல்லும்.

உண்மையான அமைதி நிலவவேண்டுமெனில், அதிகாரத்தில் இருப்போர், தங்கள் சொந்த நலன்களை விடுத்து, உண்மையான அமைதிக்காக திண்ணமான முறையில் உழைக்கவேண்டும். மக்களைக் கிழித்து எறியும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் இனி வேண்டாம்!

மத்தியக் கிழக்குப்  பகுதியை பெரிதும் வதைக்கும் சாட்டையடியாக விளங்கும் போர்களால் பெரிதும் பாதிக்கப்படுவது, வறியோரே. போரினால் சீரழிந்துள்ள சிரியாவை நினைவில் கொள்வோம்.

எருசலேம், பொதுவான புனித நகரம்

ஆழ்ந்த வேதனையோடு, அதே வேளை, தொடர்ந்த நம்பிக்கையோடு, நமது பார்வையை எருசலேம் பக்கம் திருப்புவோம். இந்தப் புனித நகரம், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமான நகரம்.

அகில உலக நாடுகளின் சமுதாயம் பரிந்துரைக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதே, இஸ்ரேல் மக்களுக்கும், பாலஸ்தீனிய மக்களுக்கும் இடையே நிலையான அமைதியைக் கொணரும்.

நம்பிக்கையின் முகமாக விளங்குவது, குழந்தைகள். இப்பகுதியில் வாழும் குழந்தைகள், பல ஆண்டுகளாக அழிவையும், மரணத்தையும், போரினால் உருவாகும் ஒலிகளையும் பார்த்தும், கேட்டும் வாழ்ந்து வருகின்றனர். இக்குழந்தைகள் எழுப்பும் அழுகுரலை உலக சமுதாயம் கேட்கட்டும்! இக்குழந்தைகளின் மீது அக்கறை கொண்ட நாம், அமைதிக்காக மீண்டும் நம்மையே அர்ப்பணிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2018, 16:44