புதன் மறைக்கல்வியுரையின்போது......060618 புதன் மறைக்கல்வியுரையின்போது......060618 

மறைக்கல்வியுரை: உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்

உறுதிப்பூசுதல் எனும் அருளடையாளத்தில் பெறப்படும் தூய ஆவி எனும் கொடை, திருஅவை எனும் சமூகத்திற்குள் நம்மையும், பிறருக்காக வழங்கும் கொடையாக மாற்றுகிறது. நாம், அகில உலகத் திருஅவையிலும், நம்மைச் சுற்றியிருக்கும் கிறிஸ்தவ சமூகத்திலும், திருஅவையின் வாழ்வு மற்றும் பணிகளில் பங்கெடுக்குமாறு அழைப்புப் பெற்றுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ், வத்திக்கான் செய்திகள்

வெயிலின் தாக்கத்தில் உரோம் நகரம் நனந்திருந்தாலும்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரைக்கு செவிமடுக்க வந்த திருப்பயணிகளின் கூட்டம் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருந்தது. க‌டந்த சில வாரங்களின் தொடர்ச்சியாக, உறுதிப்பூசுதல் எனும் அருளடையாளம் குறித்து தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை.

அன்பு சகோதர சகோதரிகளே, உறுதிப்பூசுதல் குறித்த மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இன்று, அதன் நல்விளைவுகள் குறித்து நோக்குவோம். இந்த அருளடையாளத்தில் பெறப்படும் தூய ஆவி எனும் கொடை, திருஅவை எனும் சமூகத்திற்குள் நம்மையும், பிறருக்காக வழங்கும் கொடையாக மாற்றுகிறது. கிறிஸ்துவின் மறையுடலின் உயிருள்ள அங்கத்தினர்களாகிய நாம், அகில உலகத் திருஅவையிலும், நம்மைச் சுற்றியிருக்கும் கிறிஸ்தவ சமூகத்திலும், திருஅவையின் வாழ்வு மற்றும் பணிகளில் பங்கெடுக்குமாறு அழைப்புப் பெற்றுள்ளோம். இத்தகைய திருஅவை பரிமாணத்தில் ஓங்கி ஒலிக்கும் அடையாளமான, உறுதிப்பூசுதல் அருளடையாளம்,  பொதுவாக, மறைமாவட்ட ஆயராலேயே வழங்கப்படுகிறது. தூய ஆவியாரின்  கொடைகளின் வளம்நிறை பன்மைத் தன்மைகளின் வழியாக, திருஅவையின் ஒன்றிப்பு வாழ்வை வளர்க்க உதவ வேண்டும் எனற கடமையைக் கொண்டுள்ளார், அப்போஸ்தலர்களின் வழித்தோன்றலாகிய ஆயர். புதிதாக உறுதிப்பூசுதல் அருளடையாளத்தைப் பெறுபவரும், ஆயரும், தங்களுக்கிடையே பரிமாறிக்கொள்ளும், சமாதான அடையாளம், சமூகத்தை விசுவாசத்திலும், அன்பிலும் கிறிஸ்தவச் சேவையிலும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நினைவுறுத்தி நிற்கிறது. இந்த அருளடையாளத்தைப் பெற்றுள்ள நாம் ஒவ்வொருவரும், தூய ஆவியாரின் விடுதலை அளிக்கும் மூச்சுக் காற்றுக்கு, ஒவ்வொரு நாளும் நம் இதயங்களைத் திறந்தவர்களாக செயல்படுவோமாக. நாம் வாழும் இந்த உலகிற்கும், அகில திருஅவைக்கும், நம் ஒவ்வொருவருக்கும், பலன் தருவதற்காக நம்மால் பெறப்பட்டுள்ள கொடைகளை தூய ஆவியின் மூச்சுக் காற்றின் உதவியுடன் கொளுந்து விட்டு எரியச் செய்வோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2018, 11:57