நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் சாந்தா மார்த்தா இல்ல திருப்பலி நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் சாந்தா மார்த்தா இல்ல திருப்பலி 

ஒளியான இயேசுவை மறுக்கும் உலகம் - திருத்தந்தை

பல்வேறு ஆபத்துக்களின் மத்தியில் ஊடங்களில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும், எப்போதும் உண்மையை எடுத்துரைப்பதற்கு இறைவன் அவர்களுக்கு உதவி செய்வாராக – திருத்தந்தையின் வேண்டுதல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 6 இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை, ஊடகங்களில் பணியாற்றுவோருக்கென ஒப்புக்கொடுத்தார்.

ஊடகத்தினர் உண்மையை எடுத்துரைக்க...

தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் என்ற சூழலில், ஊடங்களில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும், பல்வேறு ஆபத்துக்களின் மத்தியில் பணியாற்றுகின்றனர்; அவர்கள், எப்போதும் உண்மையை எடுத்துரைப்பதற்கு இறைவன் அவர்களுக்கு உதவி செய்வாராக என்ற வேண்டுதலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் துவக்கத்தில் எழுப்பினார்.

உலகின் ஒளியாக வாழ்ந்த இயேசு

"என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என்று இன்றைய நற்செய்தியில் (யோவான் 12:44-50) இயேசு கூறியுள்ள சொற்களை தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு இவ்வுலகில் ஒளியாக இருந்தார் என்பதையும், அவரது ஒளியை ஏற்க இவ்வுலகம் மறுத்தது என்பதையும் மையப்படுத்தி தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இருளில் வாழ்ந்த சவுலை ஒளிக்கு அழைத்து...

ஒளியின் உதவியுடன் நம்மால் உண்மையைக் கண்டுகொள்ள முடியும் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, இருளிலும், பொய்மையிலும் வாழ்ந்துவந்த சவுலை, இயேசு எவ்விதம் ஒளிக்கு அழைத்து வந்தார் என்ற எடுத்துக்காட்டைச் சுட்டிக்காட்டினார்.

ஒளியில் வாழ்வது எளிதல்ல என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த ஒளி, நம் உள்ளத்தில் உறைந்திருக்கும் அழுக்குகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதால் நாம் ஒளியை வெறுக்கிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.

"கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.  அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்" (மத். 6:22-23) என்று மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறிய சொற்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டு, நம் பார்வையை இருளாக்கும் தீமைகளைக் குறித்து விளக்கிக் கூறினார்.

பார்வையை இருளாக்கும் தீமைகள்

தீய நாட்டங்கள், ஆணவம், உலகோடு இயைந்து செல்லும் மனநிலை ஆகிய குணங்கள் நம்மை இருளில் வாழவைக்கின்றன என்ற எச்சரிக்கையை தன் மறையுரையில் விடுத்த திருத்தந்தை, நம் உள்மன இருளை விலக்கும் ஒளியாக இயேசு வருகிறார் என்பதையும் கூறினார்.

இருளில் வாழ்வோரைப் பற்றி பேசும்போது, அடிக்கடி, குற்றங்களில் ஈடுபடும் 'மாஃபியா' கும்பலைக் குறிப்பிடுகிறோம் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும், இல்லத்திலும், குற்றங்களுக்குப் பழகிப்போன மாஃபியா போன்ற மனநிலை உருவாகும் ஆபத்து உள்ளது என்று எடுத்துரைத்தார்.

எவ்வளவுதான் இருள் சூழ்ந்திருந்தாலும், நம்மை கனிவோடு அழைக்கும் இயேசு என்ற ஒளியை நாம் நாடிச்செல்வோமாக என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2020, 10:19
அனைத்தையும் படிக்கவும் >