தேடுதல்

சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 040520 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 040520  

திருஅவை உறுப்பினர்களிடையே இருக்க வேண்டிய ஒன்றிப்பு

சில தவறான எண்ணப்போக்குகளால் உருவாகும் பிரிவினைகள், காலப்போக்கில், ஒன்றிப்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாக மாறிவிடுகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புறவினத்தாரின் வீட்டில் சென்று புனித பேதுரு உணவருந்தியதால் எழுந்த பிரச்சனை குறித்து விவரிக்கும் முதல் வாசகத்தை (தி.ப. 11:1-18) மையப்படுத்தி, இத்திங்களன்று, தன் மறையுரைச் சிந்தைனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் திகழவேண்டிய ஒன்றிப்பு

கொரோனா தொற்றுநோய் அச்சம் காரணமாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் அரசின் ஆணைகளை மதித்து, காணொளி வழியாக மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில், திருஅவை உறுப்பினர்களிடையே இருக்கவேண்டிய ஒன்றிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

புனித பேதுரு, புறவினத்தார் வீட்டில் சென்று உணவருந்தியது குறித்து எழுந்துள்ள சர்ச்சையைப்போல், திருஅவைக்குள், எல்லாக் காலத்திலும், ஒரு பிரிவினர், தங்களை நீதிமான்கள் என்றும், மற்றவர்களை பாவிகள் என்றும், பிரித்துப் பார்க்கும் போக்கு இருந்து வருகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

தீர்ப்பிட்டு ஒதுக்கும் போக்கு

இவர்கள் பாவிகள் என, ஒரு பிரிவினரை ஏற்கனவே தீர்ப்பிட்டு ஒதுக்கும் போக்கு, திருஅவைக்குள் ஒரு நோயாகவே இருந்து வந்துள்ளது என்ற கவலையையும் தன் மறையுரையில் வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது, சட்டங்களை, தங்களுக்கு சார்பாக அர்த்தம் கொள்ளும், ஒருவித உலகாயுதப் போக்கு எனவும் கூறினார்.

சில தவறான எண்ணப்போக்குகளால் உருவாகும் பிரிவினைகள் காலப்போக்கில், ஒன்றிப்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாக மாறிவிடுகின்றன, என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை.

தூய ஆவியாரையும் விஞ்சும் தனிக்கருத்து

இதன் வழியாக, என்னை வழி நடத்தும் தூய ஆவியாரைவிட, என் கருத்தே முக்கியத்துவம் நிறைந்தது என்ற கருத்தும் மேலோங்குகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் விரும்புவதோ ஒன்றிப்பு எனவும் எடுத்துரைத்தார்.

இயேசு, தான் வாழ்ந்த காலத்திலும், பாவிகளின் வீட்டிற்கு சென்று அவர்களோடு உணவருந்தியது குறித்தும், கை கழுவாமல் உணவருந்தியது குறித்தும் கண்டனம் செய்த சட்டத்தை சுட்டிக்காட்டி குறைகூறப்பட்டார் என்பதை, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மந்தையைச் சேராத வேறு ஆடுகளும் உள்ளன, அவைகளையும் தான் ஒன்றிணைக்க வேண்டும் என்ற இயேசுவின் கூற்றையும் நினைவூட்டினார்.

இக்கரையையும், அக்கரையையும் இணைக்கும் ஆறு

நம் அனைவருக்கும் ஒருவரே மீட்பர் என்றிருக்கும்போது, நாம் இந்த பக்கத்தை சார்ந்தவர்கள், பிறர் மறுபக்கத்தை சார்ந்தவர்கள் என பிரித்துப் பார்ப்பது வீண், ஏனெனில், ஆற்றின் கரைகளில் தண்ணிருக்குள் ஒருபுறம் ஒரு சிலரும், மறுபுறம் வேறு சிலரும் நின்றாலும், அனைவரும் ஒரே ஆற்றிற்குள்தான் நிற்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறுபாடுகள் நியாயமானவைகளாக இருந்தாலும், அனைத்தும் திருஅவையின் ஒன்றிப்புக்குள் அடங்கியுள்ளன என மேலும் கூறினார்.

குடும்ப அமைதிக்காக செபிப்போம்

கொள்ளைநோய் காரணமாக வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால், குடும்பங்களுக்குள் வன்முறைகள் உருவாகும் அச்சத்தையும் வெளியிட்டு, குடும்ப அமைதி, பொறுமை, கலைநய படைப்பாற்றல்,வன்முறையற்ற நிலை ஆகியவை நிலவவேண்டும் என, இத்திங்களன்று, திருப்பலியின்  துவக்கத்தில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், ஒன்றிப்பிற்காக ஒரு நீண்ட செபத்தையும் சொல்லி வேண்டிக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2020, 10:27
அனைத்தையும் படிக்கவும் >