சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 110520 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 110520 

அனைத்தையும் கற்றுத்தந்து நினைவூட்டும் தூய ஆவியார்

நாம் இயேசுவை சந்தித்த நேரத்தையும், அவரை விட்டு விலகிச்சென்ற வேளைகளையும் நமக்கு நினைவூட்டி, நம்மை, சரியானப் பாதையில் வழிநடத்துபவர் தூய ஆவியார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வேலையின்றி தவிப்போருக்காக

இக்கோரோனா தொற்றுக்காலத்தில் வேலை வாய்ப்புகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்காகவும் செபிக்க அழைப்பு விடுத்து, இத்திங்கள் காலை திருப்பலியை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு போதித்தவற்றை, தெளிவாகப் புரிந்துகொள்ள, தூய ஆவியார், நம் தினசரி வாழ்வில் உதவுகிறார் என, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், இந்த நெருக்கடி காலத்தில் தங்கள் வேலையை இழந்துள்ளவர்கள், வேலைக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படாதவர்கள், போன்றோரை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக செபிப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.

கற்பிப்பவரும் நினைவூட்டுபவரும் தூய ஆவியார்

'என்மீது அன்பு கொண்டுள்ளவர், நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்புகொள்வார்...... நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை....... என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்' என்று, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:21-26) காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை மையப்படுத்தி, தன் மறையுரையில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்முள் குடியிருக்கும் தூய ஆவியார், நமக்கு எப்போதும் நெருக்கமாக இருந்து நம்மை ஊக்கமூட்டுவதோடு, இயேசு நமக்கு கற்பித்தவற்றை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நமக்கு கற்பிப்பதும், நினைவூட்டுவதும் அவரின் பணியாகிறது என்றார்.

நம்பிக்கையின் மறையுண்மைகளை புரிந்துகொள்ளவும், அம்மறையுண்மைக்குள் நாம் நுழையவும், நமக்கு உதவும் தூய ஆவியார், இயேசுவின் படிப்பினைகளின் உதவியுடன் நாம் எவ்வாறு தவறுகளின்றி நம் நம்பிக்கையை வளர்ப்பது என்பதில் உதவுகிறார் என்பதையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தேங்கிப்போவதல்ல நம்பிக்கை

நம்பிக்கை என்பது தேங்கிப்போய் நிற்கும் ஒன்றல்ல, மாறாக வளரவேண்டிய ஒன்று என்பதையும் நமக்கு நினைவூட்டும் தூய ஆவியார், நமது நம்பிக்கை, தவறுகளின்றி, ஒரே திசையில் வளர்ந்திட, அவரது வழிகாட்டுதல் நமக்கு உதவுகின்றது என மேலும் கூறினார்.

நாம் விசுவாசத்தில் வளர்ந்திட தொடர்ந்து உதவிவரும் தூய ஆவியார், இயேசுவின் போதனைகளை நமக்கு நினைவூட்டுபவராகவும் இருக்கிறார் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவை சந்தித்த நேரத்தையும் அவரை விட்டு விலகிச்சென்ற வேளைகளையும் நமக்கு நினைவூட்டி நம்மை சரியானப் பாதையில் வழிநடத்துபவர் அவரே என கூறினார்.

எத்தனை சின்ன முடிவுகளாக இருந்தாலும் எத்தனை பெரிய தீர்மானங்களாக இருந்தாலும், அவற்றில், தேர்ந்து தெளிவான முடிவுகளை எடுக்க நமக்கு உதவும் தூய ஆவியார், நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் வளரவும் உதவுகிறார் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, இறைவனின் கொடையாக இருக்கும் இந்த துணையாளராம் தூய ஆவியாரை திருமுழுக்கின்போது பெற்றுள்ள நாம், நமக்குள்  குடியிருக்கும் அக்கொடையைப் போற்றிப் பாதுகாப்போம் எனவும், தன் மறையுரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார்.

புனித திமொத்தேயுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு

புனித திமொத்தேயுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதை, இந்நாள் திருப்பலியின் துவக்கத்தில், சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தெர்மொலி (Termoli) என்ற இடத்தின் பெருங்கோவிலில் புனித திமொத்தேயுவின் கல்லறை 1945ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவை, அந்நகர மக்கள் கொண்டாடும் இவ்வேளையில், அவர்களோடு நாமும் இணைவோம், எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2020, 10:36
அனைத்தையும் படிக்கவும் >