சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 170520 சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 170520  (Vatican Media)

கோவிட்-19 தூய்மைப் பணியாளர்களுக்காக செபம்

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியில், தூய்மைப் பணியாளர்களுக்காகச் சிறப்பாகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் திக்கற்றவர்கள் அல்ல, ஏனெனில் வானகத்தில் நமக்கு ஒரு தந்தை இருக்கிறார் என்று, தன் மறையுரையில் கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மருத்துவமனைகள் மற்றும், தெருக்களைச் சுத்தம் செய்கின்ற, குப்பைத் தொட்டிகள் மற்றும், வீடு வீடாகச் சென்று குப்பைக்கூடைகளைக் காலிசெய்கின்ற, தூய்மைப் பணியாளர்களுக்காக, பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியில் சிறப்பாகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், மே 17, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு திருப்பலியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆற்றும் பணியை எவரும் கவனிப்பதில்லை, ஆயினும் அது, நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான பணி, கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக மற்றும், அவர்களுக்கு உதவுவாராக என்று கூறினார்.

வாக்குறுதியோடு பிரியாவிடை

இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தி வாசகம் (யோவா.14:15-21), மற்றும், இரண்டாம் வாசகத்தின் (1பேது.3:15-18) கருத்துக்களை அடிப்படையாக வைத்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, ஒரு வாக்குறுதியோடு, பிரியாவிடை அளித்தார் என்று கூறினார்.   

இயேசு தம் சீடர்களுக்குப் பிரியாவிடை அளிக்கையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வாக்குறுதி ஒன்றை விட்டுச்சென்றார், அவர்களை அவர் திக்கற்றவர்களாக விடமாட்டார் என்பதே அவர் விட்டுச்சென்ற வாக்குறுதி என்றுரைத்த திருத்தந்தை, திக்கற்றவர்களாக இருப்பது என்பது, ஒரு தந்தையின்றி இருப்பதாகும், இதுவே, இவ்வுலகில் பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது என்று எடுத்துரைத்தார்.

நாம், இறைத்தந்தை உணர்வு குறைவுபடும் ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றோம் என்றும், ஒருவர், தான் திக்கற்றவராக இருப்பதை உணர்வது என்பது, அவர் உடனிருப்பு மற்றும், உடன்பிறந்த உணர்வுக்காக ஏங்குவதாகும் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசு அளித்த வாக்குறுதியின் நிறைவு, தூய ஆவியாரே என்று கூறினார்.

வாக்குறுதியின் நிறைவு

தூய ஆவியார் நம்மை, தம் வாடிக்கையாளர்களாக ஆக்குவதற்காக வரவில்லை, மாறாக, இறைத்தந்தையிடம் செல்லும் வழியை நமக்கு கற்றுத்தருவதற்காக வருகிறார், இந்த வழி, இயேசு திறந்துவைத்த மற்றும், அவர் நமக்குக் காட்டிய வழி என்று கூறிய திருத்தந்தை, மூவொரு கடவுளின் ஆன்மீகம் பற்றியும், மறையுரையில் எடுத்துரைத்தார்.

மூவொரு கடவுளின் ஆன்மீகம்

மூவொரு கடவுளின் ஆன்மீகம் என்பது, இறைமகனைப் பற்றியது மட்டுமல்ல, அதன் மையமாக இருப்பவர் இறைத்தந்தை என்பதை நமக்கு நினைவூட்டிய திருத்தந்தை, இறைமகன், இறைத்தந்தையால் அனுப்பப்பட்டவர் மற்றும், அத்தந்தையிடமே திரும்பிச் செல்பவர் என்றும், இறைத்தந்தையால் அனுப்பப்பட்ட தூய ஆவியார், அத்தந்தையிடம் செல்லும் வழிகள் பற்றி நமக்கு நினைவுபடுத்துகிறார் மற்றும், அவ்வழியைக் கற்றுத் தருகிறார் என்று கூறினார்.

நாம் பிள்ளைகள், மற்றும், திக்கற்றவர்கள் (அநாதைகள்) அல்ல என்ற விழிப்புணர்வே, அமைதியில் வாழ்வதற்கு முக்கியமானதாகும் என்றும், பெரிய மற்றும் சிறிய போர்கள் எல்லாமே, எப்போதும் மக்களைத் திக்கற்றவர்களாக விட்டுவிடும் கூறைக் கொண்டிருக்கின்றன என்றும், இதனாலே அமைதியை அளிக்கும் இறைத்தந்தை பற்றிய உணர்வு, இவ்வுலகில் இல்லாமல் இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

ஒரே குடும்பம் என்ற எண்ணம்

கிறிஸ்தவர்களாகிய நாம் எதிர்நோக்கி இருப்பதற்குச் சான்றுபகரவேண்டும், அந்த நம் எதிர்நோக்கு குறித்து, மற்றவர்கள் நம்மிடம் விளக்கம் கேட்கையில், அதற்குப் பணிவோடும், மரியாதையோடும் விடையளிக்கவேண்டும், இதுவே கிறிஸ்தவர்களின் மறைப்பணி என்று திருத்தந்தை கூறினார்.

பணிவும், மரியாதையும், பொதுவான இறைத்தந்தையோடு உள்ள உறவைப் பகிர்ந்துகொள்ளும் அனைவரின் பண்புகளாகும் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையிடம் செல்லும் பாதையை நமக்குக் கற்றுத்தருமாறு தூய ஆவியாரிடம் செபிப்போம் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2020, 11:37
அனைத்தையும் படிக்கவும் >