வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 020520 வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 020520 

கோவிட்-19: மக்களைப் பராமரிக்கும் அரசுகளின் தலைவர்களுக்காக..

நம் வாழ்வு, அமைதியான நேரங்களால் மட்டுமல்ல, நெருக்கடியான நேரங்களாலும் நிறைந்தது. நெருக்கடி நேரத்தில்தான், நாம் கடவுள் மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த கோவிட்-19 தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி காலத்தில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில், ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணிக்கு நிறைவேற்றும் திருப்பலியை ஒவ்வொரு கருத்துக்காக ஒப்புக்கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 02, இச்சனிக்கிழமை காலையில் நிறைவேற்றிய திருப்பலியை, அரசுகளின் தலைவர்களுக்காக அர்ப்பணித்தார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ள, நாடுகளின் தலைவர்கள், சட்டம் இயற்றுபவர்கள், மாநிலங்களின் தலைவர்கள் போன்ற அனைவருக்கும், ஆண்டவர் உதவியும் வல்லமையும் வழங்குவாராக என்று, திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறையுரை

மேலும், இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை, தொடக்ககாலத் திருஅவை அமைதியில் திளைத்திருந்தது பற்றிச் சொல்லும் முதல் வாசகம் (தி.பணி.9:31-42), நெருக்கடியான நேரத்தில், இயேசுவின் சீடர்கள் பலர், அவரை விட்டு விலகிச் சென்றது பற்றிச் சொல்லும் நற்செய்தி வாசகம் (யோவா.6:60-69) ஆகிய இரண்டையும் .மையப்படுத்தி அமைந்திருந்தது.

அமைதியில் திருஅவை

“திருஅவை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது” என்று, மறையுரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலிலுள்ள இந்த விளக்கம் (தி.பணி.9:31), அந்நாள்களில் திருஅவை அமைதியாக இருந்தது மற்றும், ஆறுதலை அனுபவித்து வந்தது என்று நமக்குக் கூறுகிறது என்று எடுத்துரைத்தார். 

நெருக்கடி தவிர்க்க இயலாதது

நம் வாழ்வு, அமைதியான நேரங்களால் மட்டுமல்ல, நெருக்கடியான நேரங்களாலும் நிறைந்தது என்று கூறிய திருத்தந்தை, “தனது சதையை உண்டு, தனது இரத்தத்தைக் குடிப்போர் நிறைவாழ்வைக் கொண்டிருப்பர்” என்று இயேசு கூறியதை, சீடர்கள் பலரால் கிரகிக்க முடியாமல், அவரை விட்டு விலகிச் சென்றனர் என்று, இன்றைய நற்செய்தி கூறுகிறது என்றார்.

இத்தகைய நெருக்கடியான நேரங்களில் நாம் தெரிவுசெய்ய வேண்டிய நிலை உருவாகிறது என்றும், இத்தகைய நேரத்தில்தான் தம் பன்னிரு திருத்தூதர்களும் தம்மோடு தொடர்ந்து தங்கியிருப்பது பற்றி தெரிவுசெய்ய வேண்டுமென்று இயேசு கேட்டார் என்றும், உடனடியாக சீமோன் பேதுரு, தனது விசுவாசத்தை இரண்டாவது முறையாக அறிக்கையிட்டார் என்றும் திருத்தந்தை கூறினார்.

தெரிவுசெய்யும் தருணம்

“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன? என்று, தனது விசுவாசத்தை அறிக்கையிட்ட புனித பேதுரு இயேசு கூறிய அனைத்தையும் புரிந்துகொள்ளவில்லையெனினும், அவர் ஆண்டவரை நம்பினார் என்று விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நெருக்கடிகளில் வாழ்வது எவ்வாறு?

நெருக்கடிகள் மத்தியில் எவ்வாறு வாழ்வது? என்பதற்கு அர்ஜென்டீனா நாட்டுப் பழமொழி ஒன்றை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, ஒருவர் குதிரையில் பயணம் மேற்கொள்ளும்போது, ஆற்றைக் கடக்கவேண்டிய நிலையில், நடு ஆற்றில் குதிரையை மாற்றக்கூடாது என்றும், இயேசுவை விட்டு விலக நினைத்த சீடர்கள், நடு ஆற்றில் குதிரையை மாற்றியவர்கள் என்றும் கூறினார்.

இதற்கு மாறாக, நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ளும் நேரங்களில், மனஉறுதியுடன், அமைதி காக்க வேண்டும் மற்றும், பற்றுறுதியில் நிலைத்திருக்க வேண்டும் என்றும், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அதுவல்ல நேரம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த நேரத்தில்தான் நாம் நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்த நேரத்தில்தான், கடவுள் நமக்குப் பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்றும், நெருக்கடியான நேரம், மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் நேரம் என்றும், அத்தகைய நேரத்தில் நாம் விசுவாசத்தில் நிலைத்திருப்பது, நன்மையிலிருந்து நம்மை அந்நியமாக்கிக்கொள்ள அல்ல, மாறாக, அந்த நேரம், சிறந்த வாழ்வுக்குரிய மாற்றத்தை நம்மில் தூண்டும் என்றும், திருத்தந்தை எடுத்தியம்பினார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், அமைதியான மற்றும், நெருக்கடியான நேரங்கள், ஆகிய இரண்டிலும் எவ்வாறு வாழ்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, நெருக்கடியில் விசுவாசத்தில் நிலைத்திருப்பது என்பது, வலிமையுடையவராய் மாறுவதற்கு, நெருப்பு வழியாக நடப்பதாகும் என்று ஓர் ஆன்மீக எழுத்தாளர் சொன்னதையும் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

சோதனைகளை வெல்வதற்கு

நெருக்கடி நேரங்களில் சோதனைகளை வெல்வதற்கு, ஆண்டவர் நம்மீது தூய ஆவியாரை அனுப்புவராக, இதன் வழியாக, அந்நேரங்களில் நம்பிக்கையோடு, விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதை அறிந்துகொள்வோம் மற்றும், அமைதியான நேரங்களும் நம்மைப் பின்தொடரும் என்று, மறையுரையின் இறுதியில் செபித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெருக்கடியான நேரங்களில் நாம் விசுவாசத்தை விற்றுவிடாதிருக்க ஆண்டவர் நமக்குச் சக்தியை அருள்வாராக என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:23
அனைத்தையும் படிக்கவும் >