சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி, திருநற்கருணை ஆராதனை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி, திருநற்கருணை ஆராதனை  

மாற்றுத்திறனாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவோருக்காக செபம்

துணிவோடு இருப்பது, விவேகமற்று இருப்பது அல்ல, கிறிஸ்தவத் துணிவு என்பது, எப்போதும் விவேகத்தோடு இருப்பதாகும், நாம் எப்போதும் துணிவோடு இருப்பதற்கு ஆண்டவர் உதவுவாராக - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும், செவிலியர்களுக்காகச் செபிப்போம் என்று, இச்சனிக்கிழமை காலை திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காது கேளாத மக்களுக்கு சைகை மொழியில் விளக்கும் ஓர் அருள்சகோதரி எனக்கு எழுதியிருந்த மடல் வழியாக, மாற்றுத்திறன் கொண்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொண்டேன், எனவே, பல்வேறு மாற்றுத்திறன்களைக் கொண்டவர்களுக்கு எப்போதும் பணியாற்றும் அனைவருக்காகவும் செபிப்போம் என்று, ஏப்ரல் 18, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தை கூறினார்.   

இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெந்தக்கோஸ்து நாளுக்குப்பின், திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும் துணிவுடன் நற்செய்தி அறிவித்ததை (தி.பணி 4:13-21) மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.   

துணிவு

கல்வியறிவு அற்ற இவ்விரு திருத்தூதர்களின் துணிவைக் கண்டு வியந்த தலைமைக் குருக்களும், சதுசேயர்களும், மூத்தோரும், தங்களின் கண்முன்பாக நடைபெற்ற உண்மையான நிகழ்வு குறித்து எதுவும் மறுத்துப் பேச இயலாமல் இருந்தனர், ஏனெனில், பேதுருவும், யோவானும், கால் ஊனமுற்றிருந்த ஒருவரை, ஆண்டவரின் பெயரால் குணமாக்கியிருந்தனர் என்று விளக்கினார், திருத்தந்தை. 

parrhesia என்ற கிரேக்கச் சொல்லின் முக்கியத்துவம் பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சொல் பலநேரங்களில் துணிவு, நேர்மை, அல்லது, மனஉறுதி என்று மொழிபெயர்க்கப்படுகின்றது, திருத்தூதர் பணிகளில் கிறிஸ்தவப் போதகர்களின் பாணியாகவும் இது மாறியது என்று கூறினார்.

கிறிஸ்தவத் துணிவே, ஒருவரைத் திறந்த மனதுடன் பேசவைக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக, பவுலும், பர்னபாவும், எபிரேயர்களுக்கு கிறிஸ்துவின் பேருண்மையை விளக்குகையில், துணிவைக் கொண்டிருந்தது மற்றும். நற்செய்தியை மனஉறுதியுடன் போதித்தது பற்றிச் சொல்லலாம் என்று திருத்தந்தை கூறினார்.

துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள்

Parrhesia, கிறிஸ்தவர்களின் பண்பாகும், கிறிஸ்தவர் இதனைக் கொண்டிராவிட்டால், அவர் நல்ல கிறிஸ்தவர் அல்ல என்றுரைத்த திருத்தந்தை, “முன்னைய நாள்களை நினைவு கூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள், உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள்” (எபி.10:32, 35) என்ற, தனக்கு மிகவும் விருப்பமான எபிரேயருக்கு எழுதிய மடல் பகுதியை மேற்கோள் காட்டினார்.

எனினும், இந்த துணிச்சல், தலைமைக் குருக்கள், சதுசேயர்கள் மற்றும் மூத்தோரின் இறுகிப்போன, மூடியுள்ள, ஊழலான இதயங்களையும் சந்தித்தது, தங்கள் கண்முன்பாக பார்த்த உண்மையை ஏற்காமல், அவர்களின் உள்ளங்கள் இறுகிப்போயிருந்தன, இது உண்மையாய் இருக்குமோ? என்பது ஒருபோதும் அவர்களின் மனதில் நுழையவே இல்லை என்றும் திருத்தந்தை விளக்கினார்.

“இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று பேதுருவும், யோவானும் அச்சுறுத்தப்பட்டனர், ஆனால் அதற்கு பேதுரு, உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று துணிவுடன் பதில் சொன்னார்.

இவ்வாறு கோழையான பேதுருவின் இதயத்தை மாற்றியது எது? என்ற கேள்வியை முன்வைத்த திருத்தந்தை, பெந்தக்கோஸ்து  நாளில் பெற்ற, கபடின்மை, துணிவு ஆகிய தூய ஆவியாரின் கொடைகளே என்று கூறினார்.

கிறிஸ்தவரின் அடையாளம்

இன்றைய நற்செய்தி வாசகத்தையும் (மாற்.16:9-15) மறையுரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, தான் உயிர்த்தது பற்றி மற்றவர் சொல்லியும் நம்பாமல் இருந்த சீடர்களைக் கடிந்துகொண்ட இயேசு, தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி, அந்த தூய ஆவியாரின் வல்லமையை அவர்களுக்கு அளித்தார், அவர்களும் அந்நேரமே துணிவுடன் இறைவார்த்தையை அறிவிக்கத் தொடங்கினர் என்று எடுத்துரைத்தார். 

மறையுரையின் இறுதியில் நாம் எப்போதும் துணிவோடு இருப்பதற்கு ஆண்டவர் உதவுவாராக என்று செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிவோடு இருப்பது, விவேகமற்று இருப்பது அல்ல என்றும், கிறிஸ்தவத் துணிவு என்பது, எப்போதும் விவேகத்தோடு இருப்பதாகும் என்றும் கூறினார்.

இறை இரக்க ஆலயத்தில் பகல் 11 மணிக்கு திருப்பலி

இத்திருப்பலிக்குப்பின்னர், சிறிதுநேரம் திருநற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. ஏப்ரல் 19, இஞ்ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, உரோம் (Holy Spirit in Sassia) ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவேன் என்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலை 7 மணிக்கு நிறைவேற்றும் திருப்பலியை, ஏப்ரல் 20, வருகிற திங்களன்று மீண்டும் துவக்குவேன் என்றும், இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2020, 13:33
அனைத்தையும் படிக்கவும் >