சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி - 200420 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி - 200420  (ANSA)

மேலிருந்து பிறந்தாலன்றி கடவுளரசைக் காண முடியாது

உலகின் அரசியல்வாதிகள், தங்கள் கட்சி நலனுக்காக உழைக்காமல், மக்களின் பொதுநலனுக்காக உழைக்கவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்து அவர்களுக்காக செபித்த திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கட்டளைகளைக் கடைபிடிப்பது மட்டும் ஒரு கிறிஸ்தவருக்கு போதாது, மாறாக, தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்கு தன்னை அனுமதிக்கவேண்டும் என, ஏப்ரல் 20, இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி மறையுரையில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நிக்கதேமுவுக்கும் இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் குறித்து எடுத்துரைக்கும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  எவரும் மேலிருந்து பிறந்தாலன்றி கடவுளரசைக் காணமுடியாது என நிக்கதேமுவிடம் இயேசு கூறியது, தூய ஆவியாரால் பிறப்பெடுப்பது பற்றியது என்றார்.

நிச்சயமற்றதாக தெரியும் இடங்களுக்கும் தூய ஆவியார் நம்மை அழைத்துச் செல்லும்போது நம்பிக்கையுடன் அவரிடம் நம்மைக் கையளிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் எதிர்பார்க்கப்படும்  பண்பு  எனவும் கூறினார் திருத்தந்தை.

இந்நாளின் முதல் வாசகத்தில், பேதுருவும் யோவானும் விடுதலையடைந்தபின், ஏனைய சீடர்களுடன் இணைந்து செபிக்கும் வேளையில், அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர் என்ற வாசகப்பகுதியை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அத்தருணத்தை, மற்றொரு பெந்தகோஸ்து நிகழ்வாக நாம் கருதலாம் என்று கூறினார்.

தூய ஆவியாரால் மீண்டும் பிறப்பெடுத்த சீடர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அச்சமின்றி எடுத்துரைக்கும் வலிமையை இந்த புதுப்பிறப்பு வழங்கியது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீடர்கள் நற்செய்தியை அறிவிக்க துணிவுடன் செல்வதற்கு முன்னர், ஒன்றிணைந்து செபித்ததையும், அச்செபத்தின் வழியாக அவர்கள் மீண்டும் பிறப்பெடுத்ததையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இத்திங்களன்று நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், உலகின் அரசியல்வாதிகள், தங்கள் கடசி நலனுக்காக உழைக்காமல், மக்களின் பொதுநலனுக்காக உழைக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அவர்களுக்காக செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரன்பின் மிக உயரிய வெளிப்பாடாக இருக்கும் அரசியல் பணியின் அழைப்பை ஒவ்வோர் அரசியல்வாதியும் உணர்ந்து, அதற்கு இயைந்த வகையில் பொதுமக்கள் நலனுக்காக, இந்த கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2020, 14:13
அனைத்தையும் படிக்கவும் >